
மதுரை: பிப்ரவரி 13
பணம் கொடுக்காமல் கருவாடு வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் பாம்பனைச் சேர்ந்த குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பாம்பன் காவல் நிலையம் எதிரே பல ஆண்டுகளாக கருவாட்டு கடை நடத்தி வருகிறோம்.
கடந்த ஆண்டு டிச. 19-ல் பாம்பன் காவல் உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் என்பவர், எங்கள் கடையில் ரூ.1,000-க்கு கருவாடு வாங்கிவிட்டு, பின்னர் பணம் தருவதாக கூறிச் சென்றார்.
அவர் டிச. 26-ல் மீண்டும் கருவாடு கேட்டபோது என் சகோதரர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த ஆதர்ஷ், எங்களை அசிங்கமாகப் பேசிவிட்டு, கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பதாகக் கூறி காவல் நிலையம் அழைத்துச் சென்றார்.
இது தொடர்பாக காவல் ஆய்வாளர், ராமநாதபுரம் எஸ்.பி.ஆகியோரிடம் புகார் அளித்தும், உதவி ஆய்வாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதி எல்.விக்டோரியா கெளரி விசாரித்தார். மனுதாரர் தரப்பில், உதவி ஆய்வாளர் பணம் கொடுக்காமல் கருவாடு வாங்கிச் சென்றதற்கு ஆதாரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “மனுதாரரின் குற்றச்சாட்டு காவல் துறை மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரம் அளிக்கவில்லை. ஆதாரம் இருந்தால் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்.மனுதாரர் நடைபாதையை ஆக்கிரமித்து கடை நடத்தி வருவதை தட்டிக் கேட்டதால், காவல் துறை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டது. அப்போது நீதிபதி, “மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானதாக உள்ளது.
காவல் துறையினர் ஏன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்? பொய்யான குற்றச்சாட்டு என்றால், மனுதாரர் வழக்கு தொடர்ந்திருக்க மாட்டார். சிசிடிவி ஆதாரங்கள் உள்ளன.எனவே, உதவி ஆய்வாளர் மீதான மனுதாரரின் குற்றச்சாட்டு தொடர்பாக டிஎஸ்பி தலைமையில் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும். குற்றச்சாட்டு உறுதியானால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபாதைக் கடைகளுக்கு முறையாக உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.


















