
பெங்களூரு, மார்ச் 30- எனது கடின உழைப்பு, தீவிர பயிற்சியே வெற்றிக்குக் காரணம் என்று ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்தார். ஐபிஎல் சீசனின் தொடக்க ஆட்டம் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி கண்டது. முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய பெங்களூரு அணி 15.4 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. விராட் கோலி 38 பந்துகளில் தலா சிக்ஸர், பவுண்டரிகளுடன் 69 ரன்களும், டிம் டேவிட் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெற்றிக்குப் பின்னர் விராட் கோலி கூறியதாவது: டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திரைமறைவுக்கு பின் கடுமையாக உழைத்து வருகிறேன். எனது உடல் தகுதியை பாதுகாக்க அதிக கவனம் செலுத்துகிறேன். கடின உழைப்பு, தீவிர பயிற்சியே வெற்றிக்குக் காரணம். இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். சேஸிங்கில் 4 ஆயிரம் ரன்கள் குவித்த கோலி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சேஸிங்கின்போது 4 ஆயிரம் ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனையைப் புரிந்தார். மேலும் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 6-வது இடத்தைப் பிடித்தார். முன்னதாக 6-வது இடத்தில், பாகிஸ்தான் வீரர் ஷோயிப் மாலிக் 13,571 ரன்களுடன் இருந்தார். தற்போது விராட் கோலி, 13,612 ரன்கள் குவித்து மாலிக்கை பின்னுக்குத் தள்ளி 6-ம் இடத்துக்கு முன்னேறினார்.



















