
சென்னை: ஏப்ரல் 11-
சென்னையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் அதிரடி சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிக்கியுள்ளன.
ஒரத்தநாடு சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் வைத்திலிங்கம் படத்துடன் கூடிய கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் வரும் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன.
இதற்கிடையே காவல்துறையுடன் இணைந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அண்ணாநகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அரும்பாக்கம் 100 அடி சாலையில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அதில் 100 டம்மி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) இருந்தது தெரியவந்தது. மேலும், திமுக ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் வைத்திலிங்கத்தின் புகைப்படங்கள் அடங்கிய கார்டுகள் கொண்ட 5 பார்சல்கள் இருந்தன. இதனைக் கண்டு தேர்தல் பறக்கும் படையினர் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.


















