
புதுடெல்லி: மார்ச் 13-
உ.பி.யில் மதரஸாக்களை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதன் மூலம் அவற்றின் நிலையை உயர்த்த உ.பி. அரசு முடிவு செய்துள்ளது.
பாஜக ஆளும் உ.பி.யில் சுமார் 25,000 மதரஸாக்கள் உள்ளன. இவற்றில் 19,213 மதரஸாக்கள் அரசு அங்கீகாரம் பெற்றவை. இதில், 7,356 மதரஸாக்களுக்கு உ.பி. அரசு நிதி கிடைக்கிறது. இந்த மதரஸாக்கள் அனைத்தும் 53 ஆண்டுகளுக்கு முன் 1973-ல் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன. இவற்றை உ.பி.யின் மதரஸா கல்வி கவுன்சில் நிர்வகிக்கிறது. மாணவர்களுக்கு அந்தந்த மதரஸாக்களால் கல்வி பயின்ற சான்றிதழ் அளிக்கப்படுகிறது. இந்த முறையை மாற்றி, அனைத்து மதரஸாக்களும் அதன் அருகில் உள்ள பல்கலைக் கழகங்களுடன் இணைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து உ.பி. அமைச்சர் சஞ்சய் நிஷாத் கூறுகையில், “இந்த நாடு முன்பு ஷரியாவால் நிர்வகிக்கப்பட்டது. இப்போது அரசியலமைப்பு சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் கல்வி ஒரே விதமாக இருக்க வேண்டும். இதற்காக உ.பி. அரசு விரைவில் மதரஸாக்களை மாநில பல்கலைக்கழகங்களுடன் இணைக்கத் தயாராகி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பள்ளிக் கல்விக்கு பிறகு மதரஸா கவுன்சில் நடத்தும் பட்டப்படிப்புக்கான காமில் தேர்வு, பட்ட மேற்படிப்புக்கான ஃபாசில் தேர்வு இனி பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும். இதற்காக 53 ஆண்டுகள் பழமையான உ.பி. மாநில மாநில பல்கலைக்கழக சட்டத்தை திருத்த உள்ளோம். மதரஸாக்களின் பட்டங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்படுவதில்லை. இங்கு படிக்கும் மாணவர்கள் உயர்க்கல்வி படிக்கவும் வேலைக்கு செல்லவும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரச்சினை ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு பொதுக்கல்வி மாணவர்களைப் போல் மதரஸா மாணவர்களும் அனைத்து வசதிகளை பெறவே உ.பி. அரசு இந்த மாற்றங்களை செய்கிறது” என்றார். உ.பி. முதல்வர் யோகி, “மதரஸாக்கள் தங்கள் மத அடையாளத்திலிருந்து வெளியே வர வேண்டும்” என கூறி வருகிறார். இதற்காக அவர் முதல்வராகப் பதவி ஏற்றது முதல் மதரஸாக்களில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட நவீன கல்விக்கான பாடங்களை கட்டாயமாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.















