
லாகூர், மார்ச் 23- பாகிஸ்தான் சூப்பர் லீக் எனப்படும் பிஎஸ்எல் தொடர் வரும் மார்ச் 26 அன்று தொடங்கவுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேச வீரர்கள் இந்தத் தொடரிலிருந்து விலக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்விக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பிஎஸ்எல் 2026 தொடரில் விளையாட வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபிசுர் ரஹ்மான், பர்வேஸ் ஹொசைன் எமன், ஷோரிபுல் இஸ்லாம், நஹித் ராணா, தன்சித் ஹசன் தமிம் மற்றும் ரிஷாத் ஹொசைன் ஆகிய 6 வீரர்களுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தடையில்லா சான்றிதழ் வழங்கியிருந்தது. இருப்பினும், பாகிஸ்தானில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழல் காரணமாக, அந்நாட்டு அரசு தனது வீரர்களை அனுப்பத் தயக்கம் காட்டி வருகிறது.
இது குறித்து வங்கதேச விளையாட்டுத் துறை அமைச்சர் அமினுல் ஹக் கூறுகையில், “எங்கள் வீரர்களின் பாதுகாப்பில் சிறு சந்தேகம் இருந்தாலும் அவர்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப மாட்டோம். இது குறித்து முதலில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். அதன் பிறகு தேசிய பாதுகாப்பு முகமைகளின் ஆலோசனையைப் பெற்று அரசு இறுதி முடிவெடுக்கும்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு காரணங்களால் பிஎஸ்எல் போட்டிகள் வெறும் 2 மைதானங்களில் மட்டுமே நடத்தப்படும் என்றும், ஆரம்பகட்ட போட்டிகளுக்குப் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் பாகிஸ்தான் வாரியம் அறிவித்திருந்தது. இது மற்ற நாட்டு வீரர்களிடையேயும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இலங்கை மற்றும் ஜிம்பாப்வே வீரர்கள் ஐபிஎல் ஒப்பந்தங்களைக் காரணம் காட்டி பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகிவிட்டனர்.

















