
டெல்லி, ஏப்ரல் 9- 2026 ஐபிஎல் தொடரில் 14 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் இன்னும் வெற்றி கணக்கை தொடங்காமல் புள்ளிப்பட்டியலில் “0” உடன் கடைசி இடத்தில் பின்தங்கி உள்ளது. டெல்லியில் நடந்த 14வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் 70, வாஷின் சுந்தர் 55, ஜோஸ் பட்லர் 52 ரன்கள் எடுத்தனர். இலக்கை துரத்திய டெல்லி அணி 20 ஓவரில் 209 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கே.எல் ராகுல் 92 ரன்கள் விளாசினார். இந்த ஆட்டத்திற்கு பின் புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி 2 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு முன்னேறியது. தோல்வியடைந்த டெல்லி அணி 4 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் கெத்தாக உள்ளது. பஞ்சாப் அணி 5 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், பெங்களூரு அணி 4 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன. ஹைதராபாத், லக்னோ, மும்பை ஆகிய அணிகள் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன. கொல்கத்தா அணி 1 புள்ளி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 10 அணிகளில் 9 அணிகள் ஏதேனும் ஒரு வகையில் புள்ளிகளை பெற்று கணக்கை தொடங்கிவிட்டன. ஆனால், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து 0 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே மட்டும் “முட்டையுடன்” இருப்பது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.





















