Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூரில் எரிவாயு தட்டுப்பாடு அதிகரிப்பு

பெங்களூரில் எரிவாயு தட்டுப்பாடு அதிகரிப்பு

பெங்களூரு: ஏப்ரல் 4-
இந்தியாவின் ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் தலைநகரமாக திகழக்கூடிய பெங்களூரு நகரில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாடு நிலவுகிறது. ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு எல்பிஜி வரத்து நின்று போயிருக்கிறது. இதன் காரணமாக இந்தியா தற்போது அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளிடமிருந்து எல்பிஜி வாங்கி வருகிறது.
இருந்தாலும், வளைகுடா நாடுகளில் இருந்து வாங்கப்பட்ட அளவுக்கு இன்னும் கொள்முதல் செய்ய முடியவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு நிலவுகிறது. மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக சிலிண்டர் பயன்பாட்டு விநியோகத்திற்கு தான் முன்னுரிமை தர வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதே வேளையில் முன்னுரிமை அடிப்படையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. உள்நாட்டிலும் எல்பிஜி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த எல்பிஜி தட்டுப்பாடு கேஸினை எரிபொருளாக பயன்படுத்தும் வாகனங்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக ஆட்டோ ஓட்டுபவர்கள் நிலைமை மோசமாகியுள்ளது. இந்தியாவின் பிரதான நகரமாக கருதப்படும் பெங்களூருவில் பாதிக்கும் மேற்பட்ட கேஸ் நிலையங்கள் மூடப்பட்டிருப்பது பெரும் இன்னலை ஏற்படுத்தியிருக்கிறது. பெங்களூருவில் டோட்டல் கேஸ் நிறுவனம் தன்னுடைய அனைத்து கேஸ் விற்பனை நிலையங்களையும் மூடி இருக்கிறது. சூர்யா கேஸ் மற்றும் சூப்பர் கேஸ் ஆகிய நிறுவனங்களின் கேஸ் விற்பனை நிலையங்கள் நேற்று நண்பகலிலேயே அவுட் ஆஃப் ஸ்டாக் என போர்டு வைத்துவிட்டன.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் கேஸ் விற்பனை நிலையங்களில் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆட்டோக்கள் வரிசையில் காத்திருந்தன. இதற்கு இடையே எல்பிஜி தட்டுப்பாடு காரணமாக கேஸ் விலையும் உயர்த்தப்பட்டிருப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஹெச்பி, பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் எல்பிஜியை ஒரு லிட்டருக்கு 85 ரூபாய் என விற்பனை செய்கின்றன. அதுவே தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் 125 ரூபாய் வரை விற்பனை செய்கின்றன.
கேஸ் அடிப்படையிலான ஆட்டோக்கள் இயக்கம் நின்று போனால் பெங்களூரு நகரில் இயங்கும் ஆட்டோக்கள் எண்ணிக்கை குறையும். இதனால் ஆட்டோக்களுக்கான டிமாண்ட் அதிகமாகி கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளது.