
புதுடெல்லி: ஏப்ரல் 2-
இந்த ஆண்டின் சட்டமன்றத் தேர்தல்களின் கணக்கு அசாம், கேரளம், புதுச்சேரியிலிருந்து தொடங்குகிறது. ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக இந்த மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறுகின்றன.
அசாம் தேர்தலைப் பொறுத்தவரை, வெற்றி பெற ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான ‘அசோம் சோன்மிலிட்டோ மோர்ச்சா’ கூட்டணியும் முனைப்புக் காட்டுகின்றன.
2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த பதுருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏ.ஐ.யூ.டி.எஃப்.), இந்த முறை அசதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் கைகோத்திருக்கிறது.
வளர்ச்சி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, மத அடிப்படையிலான பிளவுகள், அசாமிய அடையாளத்தைப் பாதுகாத்தல் எனப் பல்வேறு அம்சங்கள் இந்தத் தேர்தலின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் எனக் கருதப்படுகிறது.
2014 மக்களவைத் தேர்தலில், அசாமில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 8ஐக் கைப்பற்றியது முதல் அங்கு பாஜகவின் ஆதிக்கம் தொடங்கியது. தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தருண் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீழ்த்தி, 2016இல் பாஜக ஆட்சியமைத்தது. சர்வானந்த சோனோவால் முதல்வரானார்.
2021 தேர்தலில், பாஜக கூட்டணி 75 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. இந்த முறை ஹிமந்த பிஸ்வ சர்மா முதல்வரானார். ஒருகாலத்தில் காங்கிரஸின் நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்பட்ட ஹிமந்த, கருத்து வேறுபாடுகள் காரணமாக பாஜகவுக்குத் தாவி, இன்றைக்குப் பெரும் ஆளுமையாக மாறியிருக்கிறார்.வளர்ச்சிப் பணிகள், உல்ஃபா அமைப்புடனான அமைதி ஒப்பந்தம், நலத்திட்ட உதவிகள் என ஆக்கபூர்வமான விஷயங்களுக்காகப் பாராட்டப்படுகிறார் ஹிமந்த.
நீண்டகாலமாக காங்கிரஸுக்கு ஆதரவு அளித்துவந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சமூகம், நலத்திட்ட உதவிகளால் பாஜக பக்கம் சாய்ந்திருக்கிறது.
பழங்குடிப் பிரிவில் வரும் இந்தச் சமூகத்தினர், அசாம் வாக்காளர்களில் 20% வரை உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. மறுபுறம், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகவும் ஹிமந்த பேசப்படுகிறார்.


















