Home செய்திகள் தேசிய செய்திகள் மகளிர் வாக்கு என்கிற மந்திரக்கோல்

மகளிர் வாக்கு என்கிற மந்திரக்கோல்

சென்னை: மார்ச் 27 –
வாக்குச் சாவடிகளை நோக்கிப் பெண்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் பின்னால் இருப்பது அவர்களுடைய அரசியல் விழிப்புணர்வு. குடும்பத் தலைவரின் விருப்பமும் பரிந்துரையுமே தேர்தல் நாளில் பெண்களின் வேதவாக்காக இருந்த காலம் மலையேறிவிட்டது.
தங்கள் – குடும்பத்தின் வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை மனதில் நிறுத்தி, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தன்னிச்சையாக முடிவெடுக்கும் ‘நிர்ணய சக்தியாக’ பெண் வாக்காளர்கள் உருவெடுத்துவிட்டனர்.
வாக்களித்தல் அவர்களது சுயசார்பின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.
இதன் விளைவாகக் கடந்த ஐந்து தேர்தல்களில் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் பெண்களே வாக்களித்து (Turnout) வந்திருப்பதைத் தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தியாவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை சுமார் 99.1 கோடி. இதில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 48 கோடி. தேசிய அளவில் ஆண் வாக்காளர்களைவிட, பெண் வாக்காளர்கள் ஏறக்குறைய 50 லட்சம் அதிகம் உள்ளனர்.
ஐந்து மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் 7.15 கோடி, மகாராஷ்டிரத்தில் 4.50 கோடி, மேற்கு வங்கத்தில் 3.73 கோடி, பிஹாரில் 3.51 கோடி, தமிழ்நாட்டில் 2.89 கோடி எனப் பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்த ஆண் வாக்காளர்கள் 2.77 கோடி. ஆனால், ஆண்களைவிட 12 லட்சம் பெண் வாக்காளர்கள் இங்கு அதிகம் உள்ளனர்.
அதேபோல் பாலின விகித அடிப்​படையில் தமிழ்​நாட்டில் 1,000 ஆண் வாக்காளர்​களுக்கு ஏறக்குறைய 1,044 பெண் வாக்காளர்கள் உள்ளனர். இந்த விகிதம்தான் தேர்தல் முடிவுகளை மாற்றும் ‘ஸ்விங் வோட்டர்ஸ்’ (Swing Voters) என்கிற மௌனப் புரட்​சி​யாளர்​களாக, வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக (Deciding Factor) பெண் வாக்காளர்​களைக் கருதவைக்​கிறது.