
அகமதாபாத், மார்ச் 10- இந்திய கிரிக்கெட் அணி கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று ஐசிசி கோப்பைகளை (2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2025-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி,
2026-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை) வென்றிருப்பது ஒரு அசாத்தியமான சாதனை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், 1999-2007 காலகட்டத்தில் ஆஸ்திரேலியா காட்டிய ஆதிக்கத்துடன் ஒப்பிடும்போது இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் மிக எதார்த்தமான ஒரு பார்வையை முன்வைக்கிறார். டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் கூறியதாவது: வெள்ளை பந்து கிரிக்கெட் குறித்து நான் அதிகமாக பேச விரும்பவில்லை. ஒருநாள் போட்டி கிரிக்கெட்டில் கடந்த மூன்று தொடர்களில் இரண்டில் நாங்கள் தோல்வியடைந்துள்ளோம். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சகாப்தம் படைப்பதாக இருந்தால் இப்படி இரண்டு தொடர்களை இழந்திருக்க மாட்டோம். சகாப்பதம் படைப்பது போன்ற விஷயங்களில் நான் நம்பிக்கை வைப்பதில்லை. எந்தப் போட்டியில் விளையாடினாலும் தினமும் முழு முயற்சியுடன் களத்தில் இறங்க வேண்டும். நாட்டிற்காக விளையாடும்போது ஒவ்வொரு போட்டியையும் வெல்ல வேண்டும் என்பதே வீரர்களின் இலக்காக இருக்க வேண்டும்.
இருதரப்பு போட்டி என்றாலும், ஐசிசி கோப்பை என்றாலும், உலகக் கோப்பை என்றாலும் வேறுபாடு இல்லை. ஏனெனில் அனைத்தும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. என்னை பொறுத்தவரையில் அணியின் ஓய்வறையில் உள்ள வீரர்கள் நாட்டை பிரதிநிதித்துவம் செய்வதற்கான வாய்ப்பை பெற்றதில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். என் இடத்தில் இருக்க விரும்பும் ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். சூர்யகுமார் யாதவ் மற்றும் ஓய்வறையில் உள்ள மற்ற வீரர்களின் நிலைக்கு வர விரும்பும் கோடிக்கணக்கான குழந்தைகள் இருக்கிறார்கள். எனவே, நாம் எதையும் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. முதலில்,
இந்த கோப்பையை நான் ராகுல் திராவிட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும். அதன் பின்னர் விவிஎஸ் லட்சுமணுக்கு அர்ப்பணிக்க வேண்டும். இந்திய கிரிக்கெட்டை இவ்வளவு சிறந்த நிலைக்கு கொண்டு வருவதற்காக ராகுல் திராவிட் செய்த சாதனைகளுக்கு ந ன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிசிசிஐ சிறப்பு மையத்தில் தனது பணி காலத்தில் அவர், செய்த அனைத்துக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.
ஏனெனில் பிசிசிஐ சிறப்பு மையம் இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கியமான பயிற்சி வழிமுறையாக இருக்கிறது. ஜெய் ஷாவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது பணி காலகத்தில் மோசமான தருணங்களை சந்தித்த போது யாரும் என்னை அழைத்து பேசியது கிடையாது.
ஆனால் நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்க தொடர்களுக்கு பின்னர் ஜெய் ஷா என்னை அழைத்து பேசினார். என் மீது நம்பிக்கை வைத்த அவருக்கு நன்றி. சூர்யகுமார் யாதவிடம் எனது எளிமையான கொள்கை குறித்து பேசுவேன். எப்போதும் தனிப்பட்ட சாதனைகளை விட, கோப்பைகளே முக்கியம்.





















