
புதுடெல்லி: மார்ச் 31 –
மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தின் (இசிஎம்எஸ்) கீழ் பயன்பெறும் நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளை இந்தியாவிலேயே வடிவமைக்காவிட்டால் மத்திய அரசின் சலுகைகள் கிடைக்காது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்தில் (இசிஎம்எஸ்) பங்கேற்கும் நிறுவனங்கள், வெறும் உதிரிபாகங்களை இணைக்கும் பணியோடு நின்றுவிடாமல், உள்நாட்டிலேயே தயாரிப்புகளை வடிவமைக்கும் திறனை மேம்படுத்த வேண்டும். உள் நாட்டுத் தொழில் சூழலை வலுப்படுத்துவதில் அக்கறை காட்டாத நிறுவனங்களை இந்தத்திட்டத்தில் இருந்து அப்புறப்படுத்த மத்திய அரசு தயங்காது.
இதுவரை இந்தத் துறையில் நிறுவனங்கள் காட்டி வரும் முன்னேற்றம் மற்றும் ஒத்துழைப்பு நாங்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை என்பதே உண்மை. நிறுவனங்களின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிக்கின்றன. வடிவமைப்பு மற்றும் தர மேம்பாட்டுப் பணிகளில் நிறுவனங்கள் மெத்தனமாகச் செயல்படுவதை ஏற்க முடியாது. தொழில் துறையினர் தங்களைச் சீர்படுத்திக் கொள்ளாவிட்டால் மத்திய அரசு கடுமையான முடிவுகளை எடுக்கும்.


















