
மும்பை, மார்ச் 5- 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணி தோல்வியடையும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் விமர்சித்துள்ளார். கடந்த சில நாட்களாக தொடர்ந்து இந்திய அணியை குறி வைத்து விமர்சித்து வரும் அமீரின் இந்த கருத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய கணிப்பு முன்னதாக சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடையும் என முகமது அமீர் கணித்திருந்தார். ஆனால் அவரது அந்த கணிப்பு தவறாக முடிந்தது. இந்திய அணி அந்த நாக் அவுட் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. ஆனாலும் அவர் மீண்டும் இந்திய அணியின் ஆட்டம் குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்திய அணி ஒரு குழுவாகச் சிறப்பாகச் செயல்படவில்லை என்றும், இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணி தோல்வியைத் தழுவும் என்றும் அவர் கூறியுள்ளார். மும்பை வான்கடே ஆடுகளம் அதிக ரன்கள் குவிக்கக்கூடிய ஒரு மைதானம் என்பதால், அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசி, இரண்டாவதாக பேட்டிங் செய்தால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.





















