சென்னை: பிப்ரவரி 13-
திமுகவுடன் முரண்பாடுகள் நிலவும் சூழலில் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மீண்டும் சென்னைக்கு பிப்.18-ம் தேதி வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ‘தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்க திமுக தாமதம் செய்வது வருத்தமளிக்கிறது’என்றார். இதை அடுத்து பிப்.22-ம் தேதி முதல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த சர்ச்சை ஒய்வதற்குள் ஒரு தனியார் ஊடக நிகழ்வில் பேசிய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசும்போது, “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லாத ஒன்று. அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை”என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை, மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் டெல்லியில் நேற்று சந்தித்து பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர் கருத்து மோதல்களால் இருகட்சிகளுக்கும் இடையில் இறுக்கமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் வரும் 18-ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கிரிஷ் சோடங்கர் முன்னிலையில் நடைபெறும் இக்கூட்டத்தில், ‘மாவட்டத் தலைவர்களின் கருத்துகள் விரிவாகக் கேட்கப்படவுள்ளன. முதல்வர் ஸ்டாலினின் ‘கூட்டணி ஆட்சி இல்லை’ என்ற அதிரடி முடிவுக்குப் பிறகு, காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ள கோபமும் வருத்தமும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.















