Home தலைப்பு செய்தி மோடியை சந்தித்த முதல்வர்

மோடியை சந்தித்த முதல்வர்

பெங்களூரு: ஏப்ரல் 15-
மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு வரவேண்டிய நிதி நிலுவைத் தொகை, மேகதாது மற்றும் மகதாயி திட்டங்களுக்கான ஒப்புதல், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவை நிதியை விடுவித்தல், பெங்களூரு வளர்ச்சிக்கு சிறப்பு நிதி மற்றும் கிருஷ்ணா மேலணைத் திட்டத்தை தேசியத் திட்டமாக அறிவிப்பது உள்ளிட்ட மாநிலத்தின் மிக முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் சித்தராமையா இன்று நேரில் வலியுறுத்தினார்.
மண்டியா மாவட்டம் ஆதிசுஞ்சனகிரி க்ஷேத்திரத்தில் குரு பைரவைக்கியா கோயிலைத் திறந்து வைப்பதற்காகப் பிரதமர் மோடி இன்று காலை சிறப்பு விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல் விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவரை மாநில அரசின் சார்பில் வரவேற்ற முதல்வர் சித்தராமையா, மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்குத் தேவையான உதவிகள் மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அவரிடம் சமர்ப்பித்தார்.
நாட்டின் கருவூலத்திற்கு கர்நாடகா பெரும் பங்களிப்பை வழங்கி வருவதாகவும், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் முன்னணியில் இருப்பதாகவும் முதல்வர் சுட்டிக்காட்டினார். மத்திய அரசிடம் மாநிலத்தின் பல திட்டங்கள் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் கர்நாடகாவின் வளர்ச்சிக்கும், கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தவும் ஒத்துழைக்குமாறு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சியில் கர்நாடகா எப்போதும் முன்னணியில் இருப்பதாகவும், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் சிறந்த விளங்கும் இந்த மாநிலம் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு தூணாக இருப்பதாகவும் அவர் கூறினார். ஐடி-பிடி விவசாயம் மற்றும் சேவைத் துறைகளில் கர்நாடகா அடைந்துள்ள முன்னேற்றம் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியுடன், கூட்டாட்சி முறைக்கு உட்பட்டு மாநிலம் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அந்தக் கடிதத்தில் சுமார் 14 முக்கிய அம்சங்களை முதல்வர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக: கோலார் ரயில் பெட்டி தொழிற்சாலை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இந்தத் திட்டத்திற்காக மாநில அரசு 123 ஏக்கர் நிலம் வழங்கத் தயாராக இருப்பதாகவும், மத்திய அரசு உடனடியாக இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பெங்களூரு-மைசூரு இடையே அதிவேக ரயில் பாதை அமைக்க வேண்டும் மற்றும் பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும்.நிதி நிலுவை ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வரவேண்டிய 15,554 கோடி ரூபாயையும், 15-வது நிதி ஆணையம் கிராம ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய 2,860 கோடி ரூபாயையும் உடனடியாக விடுவிக்கக் கோரியுள்ளார்.
பெங்களூரு நகர மேம்பாட்டிற்காக சிறப்பு நிதியாக 6,000 கோடி ரூபாயை விடுவிக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகள் மாநிலத்திற்குப் பல புதிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை அனுமதிக்க வேண்டும். 15-வது நிதி ஆணையத்தின் நிதிப்பற்றாக்குறை நிதியான 54,905 கோடி ரூபாயை விடுவிக்க வேண்டும்.நீர் திட்டங்கள் மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும். பத்ரா மேல்நிலைத் திட்டத்திற்கு முன்பு மத்திய அரசு அறிவித்த 5,300 கோடி ரூபாய் உதவியை வழங்க வேண்டும். கிருஷ்ணா தீர்ப்பாயத்தின் உத்தரவு குறித்து அரசிதழில் (Gazette) அறிவிக்க வேண்டும். கிருஷ்ணா மேலணைத் திட்டத்தைத் தேசியத் திட்டமாக அறிவிக்க வேண்டும். மகதாயி திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை வழங்க வேண்டும். நதி நீர் இணைப்புத் திட்டத்தின் கீழ் மாநிலத்திற்கு வர வேண்டிய சரியான பங்கை ஒதுக்க வேண்டும். அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணைப்படி, பட்டியலின பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மாநில அரசின் முடிவைச் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் வழங்கினார்.