
திருவனந்தபுரம், மார்ச் 16- கேரளாவில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையே அங்கு ஒரே சாலை திட்டத்தைப் பிரதமர் மோடியும், கேரள மாநில அமைச்சரும் தனித்தனியாகத் திறந்து வைத்துள்ளார். ஒரே சாலையை இப்படி இருவரும் தனித்தனியாகத் திறந்து வைக்க என்ன காரணம். தேர்தல் நடைபெறும் கேரளாவுக்குப் பிரதமர் மோடி அண்மையில் வந்து சென்றிருந்தார். இந்த விவகாரம் மத்திய அரசுக்கும், பினராயி விஜயன் அரசுக்கும் இடையே ஒரு புதிய மோதலை உருவாக்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் இரு சாலைப் பிரிவுகளின் திறப்பு விழாவிற்கு மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் பி. ஏ. முகமது ரியாஸ் அழைக்கப்படாததே இந்தச் சர்ச்சைக்கு அடிப்படைக் காரணம். பொதுவாகவே அரசு நிகழ்ச்சிகள் என வரும்போது, மத்திய அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த நிகழ்ச்சியில் பிரனாயி அமைச்சரவையில் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இதுவே இரு தரப்பிற்கும் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.


















