Home செய்திகள் தேசிய செய்திகள் ரஷ்யா உறவை முறிக்கும் இந்தியா – பரபரப்பு தகவல்கள்

ரஷ்யா உறவை முறிக்கும் இந்தியா – பரபரப்பு தகவல்கள்

புதுடெல்லி: பிப்ரவரி 7-
இந்தியா – அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி வெறும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நம்நாட்டின் வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேவேளையில் இந்த ஒப்பந்தம் என்பது நம் நாட்டுக்கும், நெருங்கிய நட்பு நாடான ரஷ்யா இடையேயான உறவை துண்டிக்கும் வகையில் உள்ளதா? என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்தார். இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்களின் ஏற்றுமதி சரிந்தது. தற்போது இருநாடுகள் இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக இடைக்கால ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நம் நாட்டுக்கு அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் உக்ரைன் மீது போர் புரிந்து வரும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. இப்படியாக டிரம்ப் விதித்த 50 சதவீத வரியில் மொத்தம் 32 சதவீத வரி நீக்கப்பட்டுள்ளதால் 18 சதவீத வரி மட்டுமே இந்தியா செலுத்த வேண்டும். இதனால் அமெரிக்காவுக்கான இந்திய பொருட்களின் வர்த்தகம் மீண்டும் அதிகரிக்கும். இது நம் நாட்டு வர்த்தகர்களுக்கான குட்நியூஸாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஒப்பந்தம் நம் நாட்டின் நெருங்கிய நண்பனான ரஷ்யாவுக்கு சிக்கலாக மாறலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். அதில், ‛‛இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியா, அமெரிக்காவிடம் இருந்து எரிசக்தி பொருட்களை வாங்குவதற்கும், அமெரிக்காவுடன் பாதுகாப்பு துறை சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்த அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கினால் மீண்டும் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அமெரிக்காவின் வரி குறைப்பு சலுகையை பெற ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா படிப்படியாக குறைத்து ஒரு கட்டத்தில் நிறுத்துமோ என்று கூறப்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில் ரஷ்யா பெரும் சிரமத்தை எதிர்கொள்ளும். ஏனென்றால் உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகள் உள்ளன. இந்தியாவும், சீனாவும் தான் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இது ரஷ்யாவின் பொருளாதாரத்துக்கு கைக்கொடுத்து வருகிறது. இப்போது இந்தியா கச்சா எண்ணெயை குறைக்கும் பட்சத்தில் ரஷ்யாவுக்கு சிக்கல் ஏற்படும். அதுமட்டுமின்றி நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து தான் அதிகமான பாதுகாப்பு துறைக்கான ராணுவம், கடற்படை, விமானப்படைக்கான தளவாடங்களை வாங்கி பயன்படுத்தி வருகிறது. ஆனால் இதில் இந்தியா அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு துறை சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக கூட்டறிக்கையில் இருநாடுகள் இடையே குறிப்பிட்ட விமானம் மற்றும் அதன் உதிரி பாகங்கள் மீதான வரிகளை நீக்குவது, அடுத்த 5 ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.45 லட்சம்) மதிப்புள்ள அமெரிக்க எரிசக்தி பொருட்கள், விமானம் மற்றும் அதன் பாகங்களை இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.