
ஜெய்ப்பூர்: மார்ச் 31 –
தொழிலதிபரும் மஹிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா, ராஜஸ்தானில் உள்ள ‘சந்த் பவோரி’ எனும் பண்டைய கால படிக்கிணறு பற்றி சமூக ஊடகங்களில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சந்த் பவோரியின் கண்கவர் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ள ஆனந்த் மஹிந்திரா, உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ராஜஸ்தானின் வானுயர்ந்த கோட்டைகளையும் அரண்மனைகளையும் காண அங்கே திரள்கின்றனர். என்றாலும், ‘சந்த் பவோரி’ மட்டும் அவற்றுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் – அதாவது, பூமிக்கு அடியில் ஆழமாகச் செல்வதன் மூலம் – தனித்து நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிராந்தியத்தின் மிகச் சிறந்த கட்டிடக்கலை படைப்புகளில் ஒன்றாக இதை வர்ணித்த மஹிந்திரா, அதன் அழகிய தோற்றம் மற்றும் வடிவமைப்பை வெகுவாகப் பாராட்டியுள்ளார். ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 95 கி.மீ. தொலைவில் உள்ள அபானேரி கிராமத்தில் சந்த் பவோரி அமைந்துள்ளது. உலகின் மிக ஆழமான மற்றும் மிகப்பெரிய படிக்கிணறுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
தரைமட்டத்தில் இருந்து சுமார் 30 மீட்டர் ஆழத்துக்கு செல்லும் இக்கட்டமைப்பு, 13 அடுக்குகளாகப் பரவியுள்ளது. இவை சுமார் 3,500 குறுகிய, மிகத் துல்லியமான படிகட்டுகளால் ஒன்றோ டொன்று இணைக்கப்பட்டுள்ளன. மேலிருந்து பார்க் கும்போது, தலைகீழாக இருக்கும் ஒரு பிரமிடு போன்ற வியக்கத்தக்கவடிவில் இது உள்ளது. நிகும்ப் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த மன்னரான ராஜா சந்தாவின் ஆட்சியில் அதாவது 8 மற்றும் 9-ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இது கட்டப்பட்டதாக வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். அம்மன்னரின் பெயரையே இந்தக் கட்டமைப்பு தாங்கியுள்ளது. ராஜஸ்தானின் வறட்சி காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் மழைநீரை சேமிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வறட்சி காலங்களில் உள்ளூர் மக்களுக்கு தொடர்ச்சியான தண்ணீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டது.


















