
புதுடெல்லி: மார்ச் 13-
வணிக ரீதியிலான சமையல் காஸ் தட்டுப்பாட்டால் உணவகங்கள் முடங்கியதால், பாதிக்கப்பட்ட டெலிவரி ஊழியர்களுக்கு ரூ.10,000 நிவாரண நிதி வழங்க வேண்டும் என இந்திய கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்கள் சங்கம் (GIPSWU) மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்தச் சங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ப் பதற்றத்தால், உணவகங்கள், தாபாக்கள் மற்றும் ‘கிளவுட் கிச்சன்’களுக்குத் தேவையான வணிக ரீதியிலான காஸ் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், உணவகங்கள் தங்கள் செயல்பாடுகளை 50 முதல் 80 சதவீதம் வரை குறைத்துள்ளன.
இதன் நேரடிப் பாதிப்பாக, ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற செயலிகள் வாயிலாக உணவு விநியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கு வரும் ஆர்டர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. நாளொன்றுக்கு 30 டெலிவரிகள் செய்து வந்த ஒரு தொழிலாளிக்கு, தற்போது 5 முதல் 10 ஆர்டர்கள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் சுமார் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலையான ஊதியம், சமூகப் பாதுகாப்பு இல்லாத இந்தத் தொழிலாளர்கள், வருமானமின்றித் தவிக்கின்றனர். எங்கள் உறுப்பினர்கள் உணவின்றி வாடுகின்றனர்; பல குடும்பங்கள் ஒருவேளை உணவைத் தவிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. குழந்தைகளின் கல்வி மற்றும் அத்தியாவசியத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத சூழலில் தொழிலாளர்கள் உள்ளனர்.
மேலும், ஆர்டர்கள் குறைந்ததைக் காரணம் காட்டி, நிறுவனங்கள் தொழிலாளர்களின் ‘ஐடி’களை (ID) முடக்குவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது தொழிலாளர்களைக் கடன் சுமையிலும், வேலையில்லாத் திண்டாட்டத்திலும் தள்ளியுள்ளது.















