
சென்னை: மார்ச் 18 –
சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் 2 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.23.28 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருட்களைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கடந்த 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்படுகின்றன. ஒரு வேட்பாளர் அதிகபட்சம் ரூ.40 லட்சம் வரை மட்டுமே தேர்தல் சம்பந்தமான பணிகளுக்காகச் செலவு செய்ய முடியும்.
தேர்தல் நடைமுறைகளை தீவிரமாகக் கண்காணிக்க 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படைகள் மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் மட்டுமல்லாமல் 25 துறை சார்ந்த கண்காணிப்புக் குழுக்களும் இடம்பெற்றுள்ளன. இதில் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சுங்கத் துறை உள்ளிட்ட துறைகளும் அடங்கும்.
தற்போது 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்புக் குழுக்கள் என்ற விகிதத்தில், தமிழகம் முழுவதும் 2,160 பறக்கும் படைகள், 2,160 நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இக்கண்காணிப்புக் குழுக்கள் மூலம் நேற்று (மார்ச் 17) காலை வரை ரூ.23.28 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நிலையில் உள்ளன.
பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்கு வசதியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தமிழகம் முழுவதும் நேற்று காலை வரை 1.68 லட்சம் சுவர் விளம்பரங்கள் நீக்கப்பட்டு 61 இனங்களில் குற்றவியல் நடவடிக்கை தொடர்வதற்காக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


















