
வாஷிங்டன்: மார்ச் 30-
ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் தொடங்கி மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களால் அமெரிக்காவின் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.29 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்கள் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரான் உடனான மோதல் தொடங்கிய முதல் மூன்று வாரங்களில் மட்டும் அமெரிக்காவிற்கு சுமார் 1.4 பில்லியன் டாலர் முதல் 2.9 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,000 கோடி முதல் ரூ.29,000 கோடி வரை) இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதனை பென்டகன் முன்னாள் பட்ஜெட் அதிகாரி எலைன் மெக்கஸ்கர் உறுதிப்படுத்தியுள்ளார். ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவின் அதிநவீன எஃப்-35 ரக போர் விமானம் ஒன்று பலத்த சேதமடைந்து அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மேலும், குவைத் விமானம் தவறுதலாகச் சுட்டதில் மூன்று எஃப்-15இ ரக விமானங்கள் விழுந்து நொறுங்கின.
ஈராக் வான்பரப்பில் இரண்டு எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மோதிக்கொண்டதில் ஆறு வீரர்கள் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ஐந்து கேசி-135 ரக விமானங்கள் சேதமடைந்து தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருகின்றன.


















