
புதுடெல்லி: ஜூலை 1-
இந்திய கடற்படைக்காக ரூ.90,000 கோடியில் புதிதாக 6 நீர்மூழ்கிகளை தயாரிக்க இந்தியா, ஜெர்மனி இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இந்திய கடற்படையில் சுமார் 150 போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவை விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் ஆகும். ஐஎன்எஸ் விஷால் என்ற பெயரில் 3-வது விமானந்தாங்கி போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்த கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுக்குள் பல்வேறு போர்க் கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. இதன்படி வரும் 2035-ம் ஆண்டுக்குள் இந்திய போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 200-க்கும் அதிகமாக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது.
தற்போது இந்திய கடற்படையில் 20 நீர்மூழ்கிகள் உள்ளன. இதில் 17 நீர்மூழ்கிகள் டீசல்- எலெக்ட்ரிக் வகையை சேர்ந்தவை ஆகும். மேலும் அணு சக்தியில் இயங்கும் 3 நீர்மூழ்கிகளும் உள்ளன. டீசல்- எலெக்ட்ரிக் வகையை சேர்ந்த இந்திய நீர்மூழ்கிகள் 2 முதல் 5 நாட்கள் வரை கடலுக்கு அடியில் பயணம் செய்யும். அணு சக்தியில் இயங்கும் 3 இந்திய நீர்மூழ்கிகள் தொடர்ந்து 3 மாதங்கள் வரை கடலுக்கு அடியில் மூழ்கியிருக்கும் திறனை பெற்று உள்ளன. இந்திய கடற்படையில் தற்போது ஏஐபி தொழில்நுட்ப அடிப்படையிலான நீர்மூழ்கிகள் இல்லை.
இந்த குறையைப் போக்க இந்திய கடற்படையின் 6 கல்வாரி நீர்மூழ்கிகள் ஏஐபி தொழில் நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாக ஜெர்மனியுடன் இணைந்து புதிதாக ரூ.90,000 கோடியில் 6 ஏஐபி நீர்மூழ்கிகளை தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக இந்தியா, ஜெர்மனி இடையே பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டி வரும் செப்டம்பரில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


















