
பெங்களூரு: ஜூலை 7-
பெங்களூரு – ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர சாலை விபத்தில் ஆந்திர அரசு பஸ் டிரைவர் உள்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
ஆந்திர மாநிலம் கர்னூலில் இருந்து பெங்களூரு நோக்கி அரசுப் பேருந்து ஒன்று இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. சிக்மகளூர் மாவட்டம், சிக்கபல்லாப்பூர் தாலுகா, தொட்டபைலகுர்க்கி என்ற இடத்தின் அருகே வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர வேகமாக மோதியது. இந்த விபத்தின் ரத்த வெள்ளத்தில் பஸ் டிரைவர் லட்சுமண் (வயது 52) மற்றும் கல்யாண் நகரைச் சேர்ந்த உமாகாந்த் ராவ் (வயது 77) என்ற பயணியும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். மேலும், பஸ்சில் பயணம் செய்த பல பயணிகள் படுகாயமடைந்தனர்.
விபத்தின் வேகம் காரணமாக பஸ்சின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி உருக்குலைந்தது. டிரைவர் சீட்டிலேயே லட்சுமணின் உடல் சிக்கிக் கொண்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரேசந்திரா போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், கிரேன் உதவியுடன் பஸ்சின் முன்பகுதியை இழுத்து டிரைவரின் உடலை மீட்டனர்.
மற்றொரு பயணியின் உடல் பஸ் ஜன்னல் வழியாக மீட்கப்பட்ட காட்சி பார்ப்போரை நெஞ்சை உருக வைப்பதாக இருந்தது.
காயமடைந்த பயணிகள் அனைவரும் உடனடியாக சிக்கபல்லாப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு 3 பயணிகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி, அந்த வழியே போக்குவரத்து நெரிசலை சீர்செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


















