
டாக்கா, மார்ச் 12- வங்கதேசம் – பாகிஸ்தான் அணிகள் இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 30.4 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஃபாஹீம் அஷ்ரப் 47 பந்துகளில், 37 ரன் சேர்த்தார். சாஹிப் சதா ஃபர்ஹான் 27, மாஸ் சதகத் 18, ஷாமில் ஹுசைன் 4, முகமது ரிஸ்வான் 10, சல்மான் ஆஹா 5, ஹுசைன் தலத் 4, அப்துல் சமத் 0, கேப்டன் ஷாகீன் ஷா அப்ரிடி 4, முகமது வாசிம் 0 ரன்களில் நடையை கட்டினர்.வங்கதேச அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளரான நகித் ராணா 7 ஓவர்களை வீசி 24 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். சுழற்பந்து வீச்சாளரான மெஹிதி ஹசன் மிராஸ் 10 ஓவர்களை வீசி 29 ரன்களை வழங்கி 3 விக்கெட்களை கைப்பற்றினார். 115 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.தொடக்க வீரரான தன்ஸித் ஹசன் 42 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் விளாசினார். லிட்டன் தாஸ் 3 ரன்கள் சேர்த்தார். முன்னதாக சைஃப் ஹசன் 4, நஜ்முல் ஹாசைன் ஷான்டோ 27 ரன்களில் ஆட்டமிழந்தனர். 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் நாளை (13-ம் தேதி) இதே மைதானத்தில் நடைபெறுகிறது.





















