
சென்னை: மார்ச் 30-
வடபழனி முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னையின் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் வடபழனி முருகன் கோயில், சாதுக்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமைக்குரியது.
பழனிக்குச் சென்று முருகனைத் தரிசிக்க இயலாத பக்தர்கள்,
தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தி அருள்பெறும் வடபழனியாக இத்தலம் போற்றப்படுகிறது.
இங்கு முருகப்பெருமான் பாதரட்சையுடன் காட்சியளிப்பது வேறெங்கும் காண முடியாத தனிச்சிறப்பாகும். இக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா நேற்று மிகச்சிறப்பாகத் தொடங்கியது.
வரும் மார்ச் 31-ம் தேதி வரை முருகப்பெருமானுக்கு லட்சார்ச்சனை நடைபெறும். நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனின் அருளைப் பெற்றனர். தினமும் காலை 7.30 முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரையிலும் லட்சார்ச்சனை நடக்கிறது.லட்சார்ச்சனையில் பங்கேற்க ரூ.250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு விசேஷ லட்சார்ச்சனை பிரசாதங்கள் வழங்கப்படும். பங்குனி உத்திரமான வரும் ஏப்ரல் 1-ம் தேதி தீர்த்தவாரி மற்றும் யாகசாலை பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு, கலசாபிஷேகத்துடன் பூஜைகள் பூர்த்தியாகின்றன. அன்று இரவு 7 மணியளவில், சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் திருவீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி தருவார். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏப்ரல் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை 3 நாட்களுக்குத் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
தினமும் இரவு 7 மணிக்கு ஜொலிக்கும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி வலம் வருவார். இத்திருவிழாவின் போது வேதபாராயணங்களும், இன்னிசை நாதஸ்வரக் கச்சேரியும் நடைபெறும்.



















