
புதுடெல்லி: மார்ச் 26-
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் ஆறு பத்திகளும் பாடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து முகமது சயீத் நூரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி, விபுல் பான்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், “இந்த சுற்றறிக்கையில் ‘செய்யலாம்’ (May) என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு வழிகாட்டுதல் மட்டுமே தவிர, கட்டாய உத்தரவு அல்ல” என்று தெளிவுபடுத்தினர்.
மேலும், பாடலைப் பாடுவது மத சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், சமூக ரீதியான நெருக்கடிகளை உருவாக்கும் என்றும் மனுதாரர்
தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே வாதிட்டார்.
இருப்பினும், “பாடலைப் பாடாதவர்களுக்கு அபராதம் அல்லது தண்டனை போன்ற எந்த சட்டப்பூர்வ விளைவுகளும் இதில் குறிப்பிடப்படவில்லை” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த மனு “காலத்திற்கு முந்தையது” (Premature) எனக் குறிப்பிட்டு, நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

















