
தெஹ்ரான்: ஏப்ரல் 3-
மத்திய கிழக்கில் 5வது வாரமாகப் போர் தொடரும் சூழலில், அங்குள்ள மிகப் பெரிய பாலம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் மேற்கு நகரமான கராஜ் ஆகியவற்றை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வந்த பாலத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வளைகுடா போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்கிறது.
கடந்த பிப்ரவரி இறுதியில் மோதல் ஆரம்பித்த சூழலில், தற்போது வரை அது தொடர்கிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியும் முடக்கப்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்டுள்ள இழப்புகளைச் சர்வதேச நாடுகளும் உணர ஆரம்பித்துள்ளது.
தொடரும் மோதல் மோதலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இருப்பினும், தற்போதைய சூழலில் மோதல் முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ச்சியாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கவே நிலைமை மோசமாக உள்ளது.
இதற்கிடையே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில், மத்திய கிழக்கின் மிக உயரமான பாலம் சேதமடைந்துள்ளது. ‘ஈரானை கற்காலத்திற்குக் குண்டு வீசி அழிப்போம்’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இதில் சில பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இடிந்து விழுந்த பாலம் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டு இருந்த இந்தப் பாலம், ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மற்றும் மேற்கு நகரமான கராஜ் ஆகியவற்றை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வந்தது. 136 மீட்டர் உயரம் கொண்ட இது, மத்திய கிழக்கின் பொறியியல் அதிசயமாகக் கருதப்பட்டு வந்தது.
இந்த சூழலில் தான் அந்த பாலத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து கடுமையான புகை மண்டலம் உருவாகியுள்ளது. மேலும், பாலம் இடிந்து விழும் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.


















