
டெஹ்ரான்: ஏப்ரல் 4-
ஈரானின் மிகப் பெரிய பாலத்தை அமெரிக்கா தகர்த்ததால், வளைகுடா நாடுகளில் உள்ள 8 பாலங்களை தகர்க்கப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானையும், கராஜ் நகரையும் இணைக்கும் வகையில் 136 மீட்டர் உயரத்துக்கு கட்டப்பட்டு வந்த பி1 என்ற பாலத்தின் மீது அமெரிக்கா நேற்று குண்டு வீசியது. இதில் பாலத்தின் ஒரு பகுதி தகர்ந்தது. இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர், 95 பேர் காயம் அடைந்தனர்.
இது குறித்து சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்த அதிபர் ட்ரம்ப், ‘‘ஈரானின் மிகப் பெரிய பாலம் தகர்க்கப்பட்டது. அதை மீண்டும் பயன்படுத்த முடியாது.
அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்யாவிட்டால், ஈரானில் ஒன்றும் இருக்காது’’ என கூறியிருந்தார். இதற்கு எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ‘‘பொது கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் ஈரானியர்களை சரணடைய வற்புறுத்த முடியாது. இது எதிரி தோல்வியடைந்ததைதான் காட்டுகிறது’’ என்றார்.
இந்நிலையில் குவைத்தில் உள்ள ஷேக் ஜாபர் அல்-அகமது அல்-சபா கடல் பாலம், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷேக் சையது பாலம், அல் மக்தா பாலம் மற்றும் ஷேக் கலிபா பாலம், சவுதி அரேபியாவையும் – பஹ்ரைனையும் இணைக்கும் தி கிங் பகத் பாலம், ஜோர்டானில் உள்ள தி கிங் உசேன் பாலம், டாமியா பாலம், மற்றும் அப்டான் பாலம் என 8 பாலங்களைத் தகர்க்கப் போவதாக ஈரான் கூறியுள்ளது.




















