
சென்னை: ஏப்ரல் 10-
‘நடிகர் விஜய்யை காங்கிரஸ் தலைமை அனுமதியுடன்தான் சந்தித்தேன்’ என, பிரவீன் சக்கரவர்த்தி புதுக் குண்டை வீசியுள்ளார். இது மீண்டும் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸில் ராகுலுக்கு நெருக்கமானவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி திமுகவுடன் கூட்டணி குறித்து தெரிவித்து வரும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: சில மாதங்களுக்கு முன் விஜய்யை தனிப்பட்ட முறையில் நான் சந்திக்கவில்லை. கட்சித் தலைமை அனுமதியுடன்தான் சந்தித்தேன். கடந்த ஆறு மாதங்களில் நான் செய்த அனைத்தும், காங்கிரஸ் கட்சித் தலைமையின் அறிவுரை, ஒப்புதல் மற்றும் அனுமதியுடன் தான் நடந்தன.
தமிழகத்தில் காங்கிரஸுக்கு தன் பலமே தெரியாது. காங்கிரஸ் புத்துயிர் பெற இந்த முறை ஒரு வாய்ப்பை பயன்படுத்த நினைத்தோம். தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டும். குறிப்பாக ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழகத்தில் நல்ல மதிப்பைப் பெற்றுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு மாநிலத்தில் ஒரு தேசியக் கட்சி தன்னை வலுப்படுத்திக் கொள்ள ஏன் கடுமையாக உழைக்கக் கூடாது? அப்படியிருக்கும்போது ஒரு காங்கிரஸ் கட்சித் தொண்டரோ அல்லது தலைவரோ அமைச்சராகி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள ஏன் ஆசைப்பட மாட்டார்? நியாயமில்லாத எதையும் நாங்கள் கேட்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


















