
கோலாலம்பூர், மார்ச் 9- கடந்த 2014-ல் 227 பயணிகள் மற்றும் 12 விமானக் குழுவினருடன் மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.எச்-370 விமானத்தை தேடும் பணியை நீட்டிக்க வேண்டுமென மலேசிய அரசுக்கு பயணிகளின் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர். 2014-ல் இதே நாளில் (மாதம் 8) மலேசியாவிலிருந்து சீனாவின் பெய்ஜிங்கிற்கு புறப்பட்ட போயிங் 777 ரகத்தை சேர்நத் எம்.எச்-370 விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் காணாமல் போனது. இதனைத் தொடர்ந்து சர்வதேச நாடுகளின் கடற்படைகளும், விமானப் படைகளும் அந்த விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. இருப்பினும் விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த விமானத்தை தேடும் பணியை அமெரிக்காவை சேர்ந்த ஆழ்கடல் ஆய்வு நிறுவனமான ‘ஓசியன் இன்ஃபினிட்டி’ நிறுவனம், மலேசிய அரசுடனான ஓப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. மாயமான விமானத்தை தேடும் பணியானது வானிலை சூழல்,
ஒப்பந்த விவகாரம் உள்ளிட்ட காரணங்களால் இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கியது உண்டு. இந்த சூழலில் விமானம் மாயமாகி 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பத்தினர் இணைந்து நிறுவியுள்ள ‘வாய்ஸ் 370’ குழு, தேடுதல் பணியை மலேசிய அரசு நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளது. ஓசியன் இன்ஃபினிட்டி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மலேசிய அரசு நீட்டிக்க வேண்டும். வரும் ஜூன் மாதத்துடன் இந்த ஒப்பந்தம் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வரும் விதிமுறைகளையின் அடிப்படையில் ஒப்பந்தத்தை நீட்டிக்கலாம் என அந்த குழு அரசுக்கு தெரிவித்துள்ளது.


















