
புதுடெல்லி, மார்ச் 26- வெள்ளை பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன் தோனி என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் மாநாட்டில் பங்கேற்ற அவர் கூறியதாவது: “தனது தலைமையிலான இந்திய அணியில் உலகக் கோப்பையை (2011) வென்று கொடுத்தவர் தோனி. எனது தலைமையிலான அணி, அதே தொடரில் (2003) இரண்டாம் இடம் பிடித்தது. இரண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அணியை அவர் வழிநடத்தி உள்ளார். நாங்கள் கிரிக்கெட் விளையாடிய போது டி20 தொடர்கள் இல்லை. டி20 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணிக்காக அவரது தலைமையிலான அணி வென்றுள்ளது. அதனால் அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன் என சொல்வேன்.ஜார்க்கண்ட் எனும் சிறிய மாநிலத்தில் இருந்து புறப்பட்டு வந்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக வளர்ந்தவர். அவருக்கு முன்பாக அந்த மாநிலத்தில் இருந்து இந்திய அணிக்காக விளையாடியவர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை. அந்த வகையில் அவர் பலருக்கு இன்ஸ்பிரேஷன். ‘அவரால் முடியும் என்றால்; நம்மாலும் முடியும்’ என்ற நம்பிக்கையை இளம் வீரர்களுக்கு அவர் தருகிறார். எனக்கு இளம் வயது தோனிதான் அதிகம் பிடிக்கும். மிகவும் எளிதாக சிரமமின்றி அவரை போல சிக்ஸர் விளாசியவர்களை நான் பார்த்தது இல்லை. நீளமான முடியுடன், அஞ்சாமல் விளையாடுவார். நான் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவன். அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். இந்த இரண்டு மாநிலங்களில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் அதிகம் உருவெடுத்தது இல்லை. அதனால்தான் தோனியை எண்ணி நான் பெருமை கொள்கிறேன்” என கங்குலி தெரிவித்தார். கடந்த 2004-ல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் தோனி அறிமுகமானார். அப்போது அணியின் கேப்டனாக கங்குலி செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. 44 வயதான தோனி, ஐபிஎல் 2026 கிரிக்கெட் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.




















