வேகமாக காலியாகும் அமெரிக்க ஆயுதங்கள்

வாஷிங்டன், மார்ச் 5- அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து வருகிறது. இதில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ள நிலையில், இது சர்வதேச அளவில் கவனிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. இதற்கிடையே அமெரிக்காவின் ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளை டிரம்ப் திடீரென சந்திக்கவுள்ளார். மத்திய கிழக்கில் இப்போது வரலாறு காணாத பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வாரம் சனிக்கிழமை ஆரம்பித்த இந்த போர் 6வது நாளாக இன்றும் தொடர்கிறது. ஒரு பக்கம் அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து முக்கிய நகரங்களைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது. மற்றொரு புறம் ஈரானும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. டிரம்ப் போட்ட உத்தரவு இதற்கிடையே ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு டிரம்பிடம் இருந்து மிக முக்கிய உத்தரவுகள் பறந்துள்ளன. ஈரானில் போர் தொடரும் நிலையில், ஆயுத உற்பத்தியை அதிகரிக்குமாறு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதற்காக நாளைய தினம் அமெரிக்காவின் டாப் பாதுகாப்பு ஒப்பந்ததாரர் தலைமை நிர்வாகிகளை வெள்ளை மாளிகையில் வைத்து டிரம்ப் சந்திக்கிறார். அமெரிக்க ராணுவத்தின் ஆயுதக் கையிருப்புகளை நிரப்புவது, ஆயுத உற்பத்தியை விரைவுபடுத்துவது தொடர்பாக இச்சந்திப்பில் விவாதிக்கப்படும். லாக்ஹீட் மார்ட்டின், ரேதியான் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் அந்த நிறுவனங்களில் இருந்து யார் வந்து டிரம்ப்பை சந்திக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஈரானில் போர் தொடங்கியது முதலே அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் அமெரிக்காவின் ஆயுத கையிருப்புகள் குறையலாம் என சொல்லப்படும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.