
சென்னை: மார்ச் 13-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் தட்டுப்பாட்டால், தமிழகத்தில் 15 சதவீதம் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கள்ளச்சந்தையில், வணிக சிலிண்டர் விலை ரூ.6 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் தீவிரத்தால், மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி, விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், திரவ பெட்ரோலியம் எரிவாயு (எல்பிஜி) விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை அளிப்பதற்காக, வர்த்தக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை உட்பட பல நகரங்களில் உணவுகளை தயாரித்து வழங்கும் ஹோட்டல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஹோட்டல்களில் விற்கப்படும் உணவு வகைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வணிக சிலிண்டர் இல்லாததால், ஓட்டல்களும் மூடப்பட்டுள்ளன.
















