
சென்னை, பிப். 9- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூஸிலாந்து அணி. ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள நியூஸிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஸத்ரன் ஜோடி நிதானமான தொடக்கம் கொடுத்தது. 6-வது ஓவரை வீசிய லாக்கி பெர்குசன், தொடக்க ஜோடியை வெளியேற்றினார். இப்ராகிம் ஸத்ரன் 12 பந்துகளில் 10 ரன்களும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 22 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்களும் எடுத்த நிலையில் லாக்கி பெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தனர். பவர்பிளேவில் ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் நடுவரிசையில் குல்பாதின் நயீப் அதிரடியாக விளையாடினார். அவர், தனது 4-வது அரை சதத்தை 29 பந்துகளில் விளாசினார். மட்டையை சுழற்றிய குல்பாதின் நயீப் 35 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் விளாசிய நிலையில் ரச்சின் ரவீந்திரா பந்தில் ஆட்டமிழந்தார். செடிக்குல்லா அடல் 24 பந்துகளில், 29 ரன்களும் டார்விஷ்ரசூலி 13 பந்துகளில் 20 ரன்களும், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 7 பந்துகளில், 14 ரன்களும், முகமது நபி 7 பந்துகளில், 10 ரன்களும் சேர்க்க 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. நியூஸிலாந்து அணி சார்பில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். மெட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 183 ரன்கள் இலக்குடன் நியூஸிலாந்து அணி பேட் செய்தது. ஃபசல்ஹக் ஃபரூக்கி வீசிய முதல் ஓவரில் டிம் ஷெய்பர்ட் 3 பவுண்டரிகளை விரட்டினார். ஆனால் முஜீப் உர் ரஹ்மான் வீசிய அடுத்த ஓவரின் முதல் இரு பந்துகளில் ஃபின் ஆலன் (1), ரச்சின் ரவீந்திரா (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர். 14 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய கிளென் பிலிப்ஸ், டிம் ஷெய்பர்ட்டுடன் இணைந்து ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சை பதம் பார்த்தார். அதிரடியாக விளையாடிய கிளென் பிலிப்ஸ் 25 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் விளாசிய நிலையில் ரஷித் கான் பந்தில் போல்டானார். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 74 ரன்கள் சேர்த்தது.















