Home செய்திகள் தேசிய செய்திகள் 2 கப்பல்களில் வந்த எல்பிஜி நாட்டின் மொத்த தேவையையும் பூர்த்தி செய்யுமா?

2 கப்பல்களில் வந்த எல்பிஜி நாட்டின் மொத்த தேவையையும் பூர்த்தி செய்யுமா?

புதுடெல்லி: மார்ச் 18-ஈரானில் போர் நடைபெற்று வருவதை அடுத்து ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுவிட்டது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி ஆகியவை இந்தியாவுக்கு வரவில்லை. இதனால் இந்தியாவில் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வீட்டு உபயோக பயன்பாட்டிற்கு சிலிண்டர் வழங்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை தரும் எண்ணெய் நிறுவனங்கள் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தி வைத்துள்ளன. இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. டீ ,காபி உள்ளிட்டவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. வீட்டு உபயோக சிலிண்டருக்கும் முன்பதிவு செய்த பலரும் தங்களுக்கு உரிய நேரத்தில் சிலிண்டர் கிடைக்கவில்லை என புகார் கூறிய வண்ணம் இருக்கின்றனர். இதற்கிடையே சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான காலத்தையும் அரசு நீட்டித்து இருக்கிறது.
இந்த சூழலில் தான் இந்தியாவின் எல்பிஜி தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஈரானிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு எல்பிஜி கப்பல்கள் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா வருவதற்கு அனுமதி பெற்றது. அந்த வகையில் ஷிவாலிக் , நந்தா தேவி உள்ளிட்ட 2 எல்பிஜி கப்பல்கள் இந்தியா வந்து அடைந்து விட்டன. ஆனால் இந்தியாவின் எல்பிஜி தட்டுப்பாட்டை போக்க இந்த இரண்டு கப்பல்களில் கொண்டுவரப்பட்ட எல்பிஜி மட்டுமே போதுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தியாவில் எல்பிஜி நுகர்வு என்பது 1998 ஆம் ஆண்டில் 5,35,000 டன்களாக தான் இருந்தது ஆனால் 2024 – 25 ஆம் ஆண்டில் அது 3.13 மில்லியன் டன்களாக உயர்ந்திருக்கிறது. நாட்டின் மூலை முடுக்கு எங்கும் விறகு அடுப்புக்கு மாற்றாக கேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டதே இந்தியாவில் எல்பிஜி நுகர்வு அதிகரிப்பதற்கு காரணம். ஆனால் இந்தியாவில் இதே காலக்கட்டத்தில் கேஸ் உற்பத்தி அதிகரித்ததா என்றால் இல்லை.
தற்போதைய சூழலில் இந்தியாவில் எல்பிஜி உற்பத்தி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டால் கூட ஒவ்வொரு மாதமும் 29 எல்பிஜி டேங்கர்கள் இந்தியா வந்தால் மட்டுமே உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்கிறது மணி கண்ட்ரோல் வெளியிட்டு இருக்கக்கூடிய செய்தி. அதாவது ஒவ்வொரு கப்பலிலும் 46,000 டன்கள் எல்பிஜி கொண்டுவரப்பட்டாலும் 29 இல் இருந்து 34 டேங்கர்கள் வரை வந்தால் மட்டுமே ஒட்டுமொத்த எல்பிஜி தேவையும் இந்தியா பூர்த்தி செய்து கொள்ள முடியும்.