
தென்காசி: ஜூலை 7-
தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டி அகழாய்வில் 2,500 ஆண்டு பழமையான படிக்கட்டு கிணறு கண்டறியப்பட்டது.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சார்பில், தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டி அகழாய்வில் 16 குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த அகழாய்வு தளத்தில் படிக்கட்டுகளை கொண்ட சதுர வடிவ செங்கல் கட்டுமான கிணறு கண்டறியப்பட்டுள்ளது. இது 2,500 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.
இதுகுறித்து, தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: காரிச்சாத்தான் கிராமத்தில் கடந்த 1930-ம் ஆண்டிலேயே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 6 தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன்மூலம் இப்பகுதி ஒரு வணிகத் தலமாக இருந்திருக்கலாம். மலையடிப்பட்டி அகழாய்வில், 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால கிணறு கண்டறியப்பட்டுள்ளது. 4-க்கு 4 மீட்டர் அளவில் படிக்கட்டு அமைப்புடன் கூடிய செங்கல் கட்டுமானத்தில் இந்த கிணறு அமைந்துள்ளது.
இங்குள்ள செங்கற்கள் 40 செமீ நீளமும், 20 செமீ அகலமும், 7 செமீ கனமும் கொண்டதாக, மிகப்பெரியவையாக உள்ளன. கிணற்றின் உள்பகுதியில் நீர்மட்டம் அதிகமாக இருந்ததற்கான தடயங்கள் தெரிகிறது. கோடை காலங்களில் இது பண்டையகால மக்களின் நீராதாரமாக இருந்திருக்கக் கூடும். இதுவரை 2 மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து அகழாய்வில் கிணற்றின் முழு ஆழம் தெரியவரும். கீழடி, காவிரிப்பூம்பட்டணம், அரிக்கமேடு போன்ற பகுதிகளில் கிடைக்கக் கூடிய செங்கல் அமைப்புகளை போன்றே இந்த கிணற்றின் கட்டுமானமும் உள்ளது. தமிழகத்தில் வேறு எந்த அகழாய்விலும் கண்டறியாத வகையில் முதல் முறையாக படிக்கட்டு அமைப்புடன் இந்த கிணறு கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிணற்றின் படிக்கட்டுகள் கற்களாலும், கிணற்றுச் சுவர்கள் செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. படிக்கட்டில் உள்ள தேய்மானம் நீண்ட காலமாக மக்கள் இந்த கிணற்றை பயன்படுத்தி உள்ளதை காட்டுகிறது. இந்த அகழாய்வின் மூலம் வாழ்விட பகுதியும், இடுகாட்டு பகுதி யும் ஒரே இடத்தில் இருந்ததை கண்டறிய முடிகிறது அகழாய்வு தளத்தில் 16 குழிகள் மட்டுமின்றி, 2 இடுகாட்டு குழிகளிலும் அகழாய்வு நடைபெறுகிறது அந்த குழிகளில் முதுமக்கள் தாழிகள், வரையப்பட்ட 3 பானைகள் கண்டறியப்பட்டுள்ளன.


















