
புதுடெல்லி: மார்ச் 10-
ஈரானின் 3 போர்க் கப்பல்களை இந்திய துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இந்தியாவில் கடற்படை கூட்டு பயிற்சியில் பங்கேற்றுவிட்டு ஈரான் திரும்பிய ஐஆர்ஐஎஸ் தேனா என்ற போர்க்கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் இந்தியப் பெருங்கடல் பகுதியில் தாக்கி அழித்தது. இதுகுறித்து இந்தியா மவுனம் காப்பது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.இந்நிலையில் ஈரான் போருக்குப்பின் நடந்தது என்ன, இந்தியா எடுத்த நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று கூறியதாவது: ”ஈரான் மீது கடந்த மாதம் 28ம் தேதி நடைபெற்ற தாக்குதல், அதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் மிகுந்த கவலையளிக்கிறது.இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச கடற்படை கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க 3 ஈரான் போர்க் கப்பல்கள் கடந்த மாதம் வந்தன. அவற்றை இந்திய துறைமுகங்களில் நிறுத்த ஈரான் கடந்த 28-ம் தேதி அனுமதி கோரியது. இதற்கு மார்ச் 1ம் தேதி இந்தியா அனுமதி வழங்கியது. இதையடுத்து ஐஆர்ஐஎஸ் லவான் என்ற கப்பல் கொச்சியில் கடந்த மார்ச் 4-ம் தேதி நிறுத்தப்பட்டது. அதில் உள்ள கடற்படை வீரர்கள், இந்திய கடற்படை முகாமில் தங்கியுள்ளனர். இந்த மனிதாபிமான நடவடிக்கைக்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற போர்க்கப்பல்லை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் டார்பிடோ குண்டு மூலம் தாக்கி அழித்தது.
மற்றொரு ஈரான் போர்க் கப்பல் ஐஆர்ஐஸ் பூஷர் கப்பல் தங்கள் துறைமுகத்தில் நிறுத்திக் கொள்ள இலங்கை அனுமதி அளித்தது. அதில் இருந்த 208 வீரர்களும் இலங்கை கடற்படை முகாமில் உள்ளனர். இந்தியர்களுக்கு உதவி: ஈரான் போர் காரணமாக மேற்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் சுமார் 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பில் மத்திய அரசு அக்கறை செலுத்துகிறது. ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களுக்குத் தேவையான உதவியை இந்திய தூதரக அதிகாரிகள் செய்து வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து 67,000 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
வர்த்தக கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதலும் கவலையளிக்கிறது. இதில் இந்தியர்கள் அதிகம் பணியாற்று கின்றனர். ஏற்கெனவே நாம் 2 இந்திய மாலுமிகளை இழந்துவிட்டோம். ஒருவரை காணவில்லை. ஈரானுக்கு இந்திய மாலுமிகளை அனுப்ப வேண்டாம் என கப்பல் நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. ஈரான் – அமெரிக்கா போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வர வேண்டும் எனவும், அதுகுறித்த முயற்சிக்கு இந்தியா ஆதரவளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
















