
உலான்பாதர்: ஏப்ரல் 10-
மங்கோலியாவின் உலான்பாதர் நகரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் மீனாட்சி ஹூடா 5-0 என்ற கணக்கில் மங்கோலியாவின் நோமுந்தரி என்க்-அம்கலனை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
54 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரீத்தி பவார் 5-0 என்ற கணக்கில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த சீன தைபேவின் ஹுவாங் ஹியாவோ வெனை தோற்கடித்து தங்கம் வென்றார். 60 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரியா கங்காஸ் 3-0 என்ற கணக்கில் வட கொரியாவின் வான் உன் ஜியோங்கை வீழ்த்தி தங்கம் வென்றார்.
அதே வேளையில் 70 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அருந்ததி சவுத்ரி 4-1 என்ற கணக்கில் கஜகஸ்தானின் பாகித் சீடிஷை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.அதேவேளையில் 57 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா 0-5 என்ற கணக்கில் தாய்லாந்தின் புன்ராவீ ரூன்ரோஸிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதேபோன்று 80+ கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அல்ஃபியா பதான் 0-5 என்ற கணக்கில் கஜகஸ்தானின் தீனா இஸ்லாம்பெகோவாவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.



















