Home செய்திகள் தேசிய செய்திகள் 40,000 மெட்ரிக் டன் எரிவாயு கப்பல் 7 நாட்களில் இந்தியா வந்தடையும்

40,000 மெட்ரிக் டன் எரிவாயு கப்பல் 7 நாட்களில் இந்தியா வந்தடையும்

புதுடெல்லி: மார்ச் 14-
ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள 28 இந்திய தேசிய கொடியிட்ட கப்பல்களில் 2 கப்பல்கள் கடற்படை பாதுகாப்புடன் நேற்று ஜலசந்தியை கடந்து சென்றது. ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய், காஸ் சப்ளை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தெற்காசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய தேசிய கொடியுடன் 28 கப்பல்கள் சிக்கியுள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இதை தொடர்ந்து நேற்று ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கித்தவித்த 28 இந்திய தேசிய கொடியிட்ட கப்பல்களில் 2 கப்பல்கள், தற்போது பாதுகாப்பாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
ஓமனிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு பெட்ரோலை ஏற்றிச் செல்லும் ‘ஜக் பிரகாஷ்’என்ற இந்தியக் கொடியிட்ட எண்ணெய் கப்பல், ஹார்முஸ் ஜலசந்தியின் கிழக்குப்பகுதியிலிருந்து கடற்படை பாதுகாப்புடன் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து எல்பிஜி காஸ் ஏற்றிச் சென்ற ‘ஷிவாலிக்’ (Shivalik) எனும் இந்தியக் கப்பல், ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றுள்ளது. ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்வது தொடர்பாக இந்தியாவும் ஈரானும் ஓர் உடன்பாட்டை எட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 40,000 மெட்ரிக் டன் அளவிலான பிரம்மாண்டமான எல்பிஜி சரக்கை ஏற்றிச் செல்லும் ‘ஷிவாலிக்’ எனும் கப்பல், சுமார் 7 நாட்களில் இந்தியக் கடற்கரையை வந்தடைய உள்ளதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அதே போல் மற்றொரு கப்பலும் அந்த ஜலசந்தியிலிருந்து கடற்படை பாதுகாப்புடன் புறப்பட்டு, விரைவில் இந்தியாவை வந்தடைய உள்ளதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடிக்கும் ஈரான் அதிபர் பெசெஷ்கியானுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்தியக் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் கடந்து செல்ல ஈரான் அனுமதித்துள்ளது. நேற்று ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து புறப்பட்ட ‘ஷிவாலிக்’ கப்பலுக்கு, அதன் பயணத்தின் போது இந்திய கடற்படை பாதுகாப்பு அளித்து வருகிறது.
இந்த முன்னேற்றத்தை ஒன்றிய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா உறுதி செய்தார். ஜக் பிரகாஷ் கப்பல் புறப்பட்டது பற்றி அவர் கூறியதாவது:ஈரான் போரால் மொத்தம் 28 இந்தியக் கொடியிட்ட கப்பல்கள் சிக்கிக்கொண்டுள்ளன. அவற்றில் 24 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்குப் பகுதியிலும், நான்கு கப்பல்கள் கிழக்குப்பகுதியிலும் உள்ளன. கிழக்குப் பகுதியில் சிக்கியிருந்த நான்கு கப்பல்களில் ஒன்றான ‘ஜக் பிரகாஷ்’ தற்போது அங்கிருந்து புறப்பட்டுவிட்டது. அக்கப்பல் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு இடத்திற்கு எரிபொருளை ஏற்றிச் செல்கிறது. கப்பல் கண்காணிப்பு இணையதளங்கள் காட்டிய தகவலின்படி, அக்கப்பல் ஓமனில் உள்ள சோஹார் துறைமுகத்திலிருந்து பெட்ரோலை ஏற்றிக்கொண்டு, தான்சானியாவில் உள்ள டங்கா நகரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இது மார்ச் 21 அன்று டங்காவைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கிழக்குப் பகுதியில் மூன்று கப்பல்கள் தொடர்ந்து சிக்கிக்கொண்டிருக்கின்றன; அவற்றில் 76 மாலுமிகள் உள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்குப் பகுதியில், அதாவது பாரசீக வளைகுடாவில் சிக்கியுள்ள 24 இந்தியக் கொடியிட்ட கப்பல்களில் மொத்தம் 668 மாலுமிகள் உள்ளனர்.