
விஜயவாடா: மார்ச் 25 –
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து விஜயவாடா போலீஸார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: டெல்லி, ராஜஸ்தான், பிஹார், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த 42 பேர் ஒன்று கூடி ரகசியமாக வாட்ஸ்-அப் குரூப் நடத்தி வருகின்றனர். இதில் எடுக்கப்படும் சில நடவடிக்கைகள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு அனுப்பப்படுகின்றன. அவர்கள் மீண்டும் இதில் ஒருவருக்கு தரும் உத்தரவை இந்த 42 பேரும் பின்பற்றி வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் `அல் மாலிக் இஸ்லாமிக் யூத்’ எனும் பெயரில் ஓர் அமைப்பாக, ரகசியமாக செயல்பட்டு வருகின்றனர். இந்தியாவை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கொள்கையாகும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இங்குள்ள இளைஞர்களுக்கு மூளைச் செலவு செய்து, சில இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பி வைத்து, அங்கு ஆயுத பயிற்சி அளித்து மீண்டும் நம் நாட்டுக்கே அனுப்பி வைப்பார்கள். சமயம் பார்த்து தீவிரவாத செயலில் ஈடுபட வைப்பார்கள். இதுதான் இந்த அமைப்பின் வேலை.
கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றில் இருந்து பல ஆடியோ, வீடியோ மெசேஜ்கள் மூலம் போலீஸாருக்கு இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.
மேலும், இதில் ஈடுபட்டுள்ள 42 பேர் விஜயவாடா உட்பட 7 மாநில நகரங்களில் பயங்கர சதி திட்டத்தைத் தீட்டியுள்ளனர். ஆதலால், மீதமுள்ளவர்களை பிடிக்க பல மாநிலங்களுக்கு போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்புக்கும்(என்ஐஏ) தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

















