
நாமக்கல்: மார்ச் 9-
நாமக்கல் மாவட்டத்தில் 7 வயது சிறுமி, கட்டிட தொழிலாளி ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த கொடூர இளைஞரை தூக்கில் போட வேண்டும் எனக் கூறி அப்பகுதி மக்கள் திரண்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பேக்கரி தொழிலாளி ஒருவரின் 7 வயது மகள் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவர் காணாமல் போனார். நீண்ட தேடுதலுக்கு பிறகு மீண்டும் சிறுமி வீட்டுக்கு வந்தபோது, அழுதுகொண்டே வந்துள்ளார். அவரது உடையில் ரத்தக்கறை இருந்துள்ளது. அவரது உடலில் மாற்றங்கள் இருந்ததை பெற்றோர் கவனித்துள்ளனர். இதனையடுத்து, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிறுமியை பெற்றோர் அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுமியை மருத்துவர் பரிசோதித்ததில், சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரியவந்தது. இதையடுத்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் வன்கொடுமை கொடுத்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்ததில் சந்தேகத்திற்கு இடமான ஒரு நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த அந்த நபரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதற்குள் இந்த தகவல் குமாரபாளையம் நகரம் முழுவதும் பரவியதால் குமாரபாளையம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கானோர் குமாரபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குமாரபாளையம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விமலா தலைமையில் மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான போலீசார் குமாரபாளையம் பகுதியில் பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

















