ரஷ்யா கச்சா எண்ணெயால் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவிகித வரி ரத்து

வாஷிங்டன்: பிப்ரவரி 3-
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி போடப்பட்ட வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக டிரம்ப் அறிவித்தார். இது ஒருபுறம் இருக்க ரஷ்யாவில் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் வாங்குவதால் போடப்பட்ட 25 சதவீத அபராத வரியை நீக்கவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. இதனால் அமெரிக்கா நம் நாட்டுக்கு விதித்த வரி 50 சதவீதத்தில் இருந்து வெறும் 18 சதவீதமாக குறைய உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்தார். இந்த வரி 2 கட்டங்களாக விதிக்கப்பட்டது. முதலில் அமெரிக்காவுடனான வர்த்தக பற்றாக்குறையை சுட்டிக்காட்டி 25 சதவீதமும், அதன்பிறகு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி 25 சதவீதம் என்று மொத்தம் 50 சதவீத வரியை விதிக்கப்பட்டது.
இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்களின் ஏற்றுமதி சரிவை சந்தித்தது. இதையடுத்து நம் நாடும், அமெரிக்காவும் இணைந்து புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவு செய்தது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் முடிவு என்பது கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் நேற்று டொனால்ட் டிரம்ப் – பிரதமர் மோடி ஆகியோர் தொலைபேசி வழியாக பேசினர்.
அப்போது இருநாடுகள் இடையேயான வர்த்தகம் ஒப்பந்தம் ஓகே ஆனது. இதையடுத்து இதன்மூலம் இந்தியாவுக்கு, அமெரிக்கா விதித்த 25 சதவீத வர்த்தக வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதுபற்றி டிரம்ப் தனது ட்ரூத் வலைதளத்தில் குறிப்பிட்டு இருந்தார். அதில், ‛‛பிரதமர் மோடி உடனான நட்பு மற்றும் மரியாதையின் காரணமாக அவரது கோரிக்கையை அமெரிக்கா ஏற்றது., அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு உடனடியாக ஒப்புக்கொண்டோம். இதன் மூலம் அமெரிக்கா தற்போதுள்ள 25 சதவீத பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைக்கும்.ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த அவர் (பிரதமர் மோடி) ஒப்புக்கொண்டார். அதற்கு பதில் அமெரிக்கா, வெனிசுலாவிடம் கொள்முதல் செய்ய உள்ளார். அதேபோல் இந்தியாவும், அமெரிக்கா பொருட்கள் மீதான வரியை பூஜ்ஜியமாக குறைக்க முன்வரும். அதுமட்டுமின்றி எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி உள்பட பல துறைகளில் பிரதமர் மோடி, 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருட்களை அமெரிக்காவில் இருந்து வாங்குவதாக உறுதியளித்துள்ளார்’’ என்று கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாக தான் தற்போது ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் விதிக்கப்பட்ட 25 சதவீத வரியையும் அமெரிக்கா ரத்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்யாவுக்கு பதில் அமெரிக்கா, வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதால் இந்த முடிவை அமெரிக்கா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்திருந்த 50 சதவீத வரி என்பது 18 சதவீதமாக குறையும். இதனை ப்ளூம்பெர்க் மற்றும் வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. ப்ளூம்பெர்க் சார்பில் வெளியான செய்தியில் டெல்லியில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி உறுதி செய்யப்பட்டுள்ளது.