
புதுடெல்லி: பிப்ரவரி 3-
இந்தியா மீதான வரி 18 சதவிகிதமாகக் குறைத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. “2 பெரிய பொருளாதாரங்களும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும்போது, மக்களுக்கு பெரிதும் நன்மை அளிக்கும். ஏராளமான வாய்ப்புகள் திறக்கும்.” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, இரு தலைவர்கள் இடையே நிகழ்ந்த இந்த உரையாடலில் வர்த்தக விவகாரம், வரி விதிப்பு உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து, டிரம்ப் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
டிரம்ப் வெளியிட்ட பதிவில், “ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்தும் பேசினோம். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை பிரதமர் மோடி நிறுத்தி அமெரிக்காவில் இருந்தும், வெனிசுலாவில் இருந்தும் அதிகளவில் வாங்குவதாக ஒப்புக்கொண்டார். இது உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர உதவும். இந்த போரில் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். பிரதமர் மோடியுடனான நட்பும் மரியாதை காரணமாகவும், அவருடைய வேண்டுகோளின் பேரிலும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25%-லிருந்து 18%-ஆக அமெரிக்கா குறைப்பதால் பதிலுக்கு அமெரிக்கா மீதான வரிகள் மற்றும் வர்த்தகத் தடைகளை பூஜ்ஜியமாக குறைக்க இந்தியா உறுதியளித்துள்ளது.
மேலும் பிரதமர் மோடி அமெரிக்கப் பொருட்களை வாங்குவதாகவும், இதற்கு முன்பைவிட அதிகளவில் நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்து உள்ளார். மேலும் அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண்மை, நிலக்கரி மற்றும் பிற தயாரிப்புகள் உள்ளிட்டவற்றில் 500 பில்லியன் டாலருக்கு மேற்பட்ட கொள்முதலுக்கும் பிரதமர் மோடி உறுதி அளித்தார். பிரதமர் மோடியும் நானும், பல்வேறு காரியங்களை செய்து முடிப்பவர்கள்.” என்று டிரம்ப் தெரிவித்தார். இந்நிலையில், இந்தியா மீதான வரியைக் குறைத்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது அன்பு நண்பர் டிரம்ப் உடன் இன்று உரையாடியது மிகவும் மகிழ்ச்சி. இனிமேல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் மீதான வரி 18 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அற்புதமான அறிவிப்புக்காக 140 கோடி இந்திய மக்கள் சார்பாக அதிபர் டிரம்ப்புக்கு மிகப்பெரிய நன்றி. இரண்டு பெரிய பொருளாதாரங்களும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும்போது, மக்களுக்கு பெரிதும் நன்மை அளிக்கும். ஏராளமான வாய்ப்புகள் திறக்கும். உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலைமை முக்கியமானது. அமைதிக்கான அவரது முயற்சிகளை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது. நமது உறவை முன்னெப்போதும் இல்லாத அளவில், இன்னும் உயரத்துக்குக் கொண்டு செல்ல அவருடம் நெருக்கமாக பணியாற்ற விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், அமெரிக்கா மீதான வரிகள் மற்றும் வர்த்தகத் தடைகளை பூஜ்ஜியமாக குறைக்க இந்தியா உறுதியளித்ததாக டிரம்ப் தெரிவித்தது பற்றியோ, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண்மை, நிலக்கரி மற்றும் பிற தயாரிப்புகள் உள்ளிட்டவற்றில் 500 பில்லியன் டாலருக்கு மேற்பட்ட கொள்முதலுக்கும் பிரதமர் மோடி உறுதி அளித்தார் எனக் கூறியது பற்றியோ பிரதமர் மோடி எதுவும் குறிப்பிடவில்லை.















