
மும்பை, பிப்ரவரி 5- தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன், 20 பந்துகளில் 7 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 53 ரன்களை விளாசி தள்ளி இருக்கிறார். இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பே அளிக்கப்படவில்லை. இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் 2 நாட்களில் தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக அத்தனை அணிகளும் பயிற்சிப் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணி நேற்று தென்னாப்பிரிக்கா அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இதில் இந்திய அணியின் அத்தனை பேட்ஸ்மேன்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய இருவரும் களமிறங்கினர். அபிஷேக் சர்மா 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ரிட்டையர்ட் அவுட்டாகி வெளியேற, 3வது பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென திலக் வர்மா களமிறங்கினார். அப்போது இஷான் கிஷன் – திலக் வர்மா இருவரும் பட்டாசாய் வெடித்தனர். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 20 பந்துகளில் 7 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 53 ரன்கள் எடுத்து ரிட்டையர்ட் அவுட்டாகினார். அதேபோல் திலக் வர்மாவும் 19 பந்துகளில் 3 சிக்ஸ், 3 பவுண்டரி விளாசி 45 ரன்கள் எடுத்து தனது ஃபார்மை நிரூபித்தார். இதன்பின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் உள்ளிட்ட பலருக்கும் பேட்டிங் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் சஞ்சு சாம்சன் கடைசி வரை களமிறங்கவே இல்லை. நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சஞ்சு சாம்சன் வெறும் 46 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். ஃபார்மில் இல்லாத சஞ்சு சாம்சனுக்கு டி20 உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு அளிக்க தயாராக இல்லை என்று கருதப்படுகிறது. இதனால் பயிற்சி ஆட்டமே சஞ்சு சாம்சனுக்கான மறைமுக செய்தியாக பார்க்கப்படுகிறது.இஷான் கிஷன், திலக் வர்மா ஆகிய இருவரில் யாராவது காயம் அடைந்தால் மட்டுமே சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். திலக் வர்மா காயத்தில் இருந்து குணமடைந்து வந்திருப்பதால், அனைத்து போட்டிகளிலும் அவரை களமிறக்காமல் நாக் அவுட் போட்டிகளில் களமிறக்க கம்பீர் திட்டமிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.


















