
புதுடெல்லி:பிப்ரவரி 6-
‘‘மக்களவையில் பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் திட்டமிட்டு இருந்தனர்’’ என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். கடந்த 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கடந்த 2-ம் தேதி மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது முன்னாள் ராணுவ தளபதி நரவனேவின் நினைவுக் குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகத்தை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச முயன்றார். இந்திய, சீன எல்லைப் பிரச்சினை குறித்து அவர் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி புதன்கிழமை மாலை 5 மணிக்கு பதிலுரை அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் அமளியால் பிரதமரின் பதில் உரை ரத்து செய்யப்பட்டது.
இதனால் மதியம் 12 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அவை 12 மணிக்கு கூடிய பிறகும் அமளி நீடித்ததால் பிற்பகல் 2 மணி வரையும், அதில் இருந்து 3 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. அவர்களின் அமளிக்கு நடுவே குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அவைத் தலைவர் ஓம் பிர்லா எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.


















