Home செய்திகள் தேசிய செய்திகள் பொய்களுக்குள் தஞ்சமடைந்துள்ளார் பிரதமர் மோடி: ராகுல் காந்தி

பொய்களுக்குள் தஞ்சமடைந்துள்ளார் பிரதமர் மோடி: ராகுல் காந்தி

டெல்லி: பிப்ரவரி 6-
கேள்விகளால் பதற்றமடைந்த பிரதமர் நரேந்திர மோடி, பொய்களுக்குள் தஞ்சமடைந்து விட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை அப்பட்டமான பொய் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் பதிலுரை இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சீன எல்லைப் பிரச்சனை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் கடும் அமளி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி புதன்கிழமை மாலை 5 மணிக்கு பதிலுரை அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக பிரதமர் மோடியின் பதிலுரை நேற்று ரத்து செய்யப்பட்டது. மோடி உரை இன்று காலை நாடாளுமன்றம் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் பேச்சை விமர்சித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “கேள்விகளுக்கு இவ்வளவு பதற்றம் ஏன்? மோடி ஜி உண்மைக்கு பயந்து பொய்களுக்குள் தஞ்சமடைந்துவிட்டார். சரி அவருக்குத் தோன்றியதை செய்திருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் உரையை விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “மாநிலங்களவையில் 97 நிமிடங்கள் நீடித்த பிரதமரின் உரை, மற்றொரு தேர்தல் பேரணியாகவே இருந்தது. எப்போதும் போலவே, இதிலும் தவறான வழிநடத்தல், தாக்குதல்கள், திரித்துப் பேசுதல், நாடகங்களும் இடம்பெற்றன” என்று தெரிவித்துள்ளார்.