
ஜம்மு: பிப்ரவரி 9-
ஜம்மு காஷ்மீரில் கடந்தாண்டு 36,000 வெளிநாட்டினர் உட்பட 1.7 கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்கு கடந்தாண்டு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை எவ்வளவு என காஷ்மீர் சட்டப்பேரவையில் எம்எல்ஏ ஹசானி மசூதி கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு சுற்றுலாத்துறை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: ”ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு கடந்தாண்டு 1,77,65,390 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இவர்களில் 36,410 பேர் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள். இந்தாண்டில் காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு இலக்கு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை.
சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காஷ்மீர் சுற்றுலாவை விளம்பரப்படுத்தவும், வசதிகளை மேம்படுத்தவும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சர்வதேச விமானங்களின் போக்குவரத்து மீண்டும் தொடங்க அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. இங்கு குடியுரிமை, சுங்கம், பாதுகாப்பு, மற்றும் பயணிகளை கையாள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளூர் வேலை வாய்ப்பு மேம்பட்டுள்ளது. இவ்வாறு காஷ்மீர் சுற்றுலாத்துறை கூறியுள்ளது. பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்த பிறகு காஷ்மீரில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.














