ஊட்டியில் உறைபனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஊட்டி: பிப்ரவரி 9-
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிசம்பர் முதல் வாரத்தில் உறைபனிப் பொழிவு ஏற்பட்டது. தற்போது பிப்ரவரி மாதம் தொடங்கியும் உறைபனிப் பொழிவு குறையவில்லை.
மாவட்டம் முழுவதும் பரவலாக உறைபனிப் பொழிவு காணப்படுகிறது. குறிப்பாக, ஊட்டி, அவலாஞ்சி, தலைகுந்தா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக உறைபனி காணப்படுகிறது.
இந்நிலையில், ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று அதிகாலை காணப்பட்ட உறைபனியால், ஊட்டி குதிரைப் பந்தய மைதானம், காந்தல், தலைகுந்தா, அவலாஞ்சி பகுதிகளில் உள்ள புல்வெளி மைதானங்கள் வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போன்று காட்சியளித்தன.
கடும் உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதிகாலை நேரத்தில் காய்கறி றுவடை, தேயிலை தோட்டப்பணிகள், பால் சேகரிப்பு, கட்டுமான வேலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்குச் செல்லும் தொழிலாளர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். மேலும், உறைபனி காரணமாக சில இடங்களில் பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்களின் இலைகள் கருகி உள்ளதாகவும், தொடர்ந்து இதே நிலை நீடித்தால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் நீலகிரி மாவட்டவிவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.