
புதுடெல்லி: பிப்ரவரி 10-
இந்தியாவில் பிஎஃப் கணக்கு வைத்திருக்கக்கூடிய 8 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் எப்போது முதல் தங்களுடைய பணத்தை பிஎஃப் பணத்தை ஏடிஎம் வாயிலாகவும் யுபிஐ வாயிலாகவும் எடுத்து பயன்படுத்த முடியும் என்ற அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் ஓய்வு காலத்தில் நிதி பாதுகாப்பு பெற வேண்டும் என்பதற்காக இபிஎஃப்ஓ அமைப்பின் மூலம் பிஎஃப் கணக்குகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பி எஃப் கணக்கில் ஊழியர் சார்பாகவும் அவர் வேலை பார்க்கும் நிறுவனம் சார்பாகவும் வரவு வைக்கப்படும் பணத்திற்கு மத்திய அரசு ஆண்டுதோறும் வட்டியும் வழங்குகிறது
நமக்கு திடீரென ஒரு பணத் தேவை ஏற்படுகிறது எனும்போது பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை நாம் எடுத்து பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை அத்தனை எளிதாக எடுத்து நாம் பயன்படுத்தி விட முடியாது. ஏனெனில் அதற்காக நாம் விண்ணப்பம் செய்து உரிய ஆவணங்களை தாக்கல் செய்து அதிகாரிகள் அதற்கு அனுமதி அளிக்கும் வரை காத்திருக்க வேண்டும். சராசரியாக இந்த வேலை ஒரு வாரத்தில் இருந்து 15 நாட்கள் வரை ஆகலாம். ஆனால் இந்த நவீன தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து விட்ட காலகட்டத்தில் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை ஏடிஎம் வாயிலாகவும் யுபிஐ செயலிகள் வாயிலாகவும் எடுத்துக் கொள்ளக் கூடிய வசதி விரைவில் கொண்டுவரப்படும் என கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாதாரங்களுக்கு இது மிகப்பெரிய ஒரு அறிவிப்பாக இருந்தது. இதற்கேற்ற வகையில் தற்போது இபிஎஃப் அமைப்பு தொழில்நுட்ப ரீதியிலாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது.
இந்த நிலையில் ndtv வெளியிட்டுள்ள செய்தியில் வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களுடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை நேரடியாக யுபிஐ செயலிகள் வாயிலாக எடுக்கக்கூடிய வசதி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுவதாக தெரிவித்து இருக்கிறது. இதற்காக புதிய மொபைல் செயலியை இபிஎஃப் அமைப்பு அறிமுகம் செய்ய உள்ளதாக கூறுகிறது. சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொள்ள முடியும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது எப்படி நம் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை டிஜிட்டல் ரீதியிலாக நம் செல்போனில் ஒரு செயலி வாயிலாகவே மேலாண்மை செய்கிறோமோ அதேபோன்ற ஒரு சேவையை கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறது ஈபிஎஃப்ஓ அமைப்பு.













