ஓசூர் விமான நிலைய திட்டத்தை நிராகரித்தது ஏன்? –மத்திய அமைச்சர் பதில்

சென்னை: பிப்ரவரி 10-
தமிழ்நாடு அரசின் கனவு திட்டங்களில் ஒன்றாக ஓசூர் விமான நிலைய திட்டம் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு விமான நிலைய திட்டத்திற்கு அனுமதி கொடுக்க மறுத்து வருகிறது. தமிழ்நாட்டில் தொழில்துறை ரீதியாகவும் வேலைவாய்ப்பு ரீதியாகவும் ஓசூர் நகரம் வேகமான வளர்ச்சி அடைந்து வரக்கூடிய நிலையில் இங்கே ஒரு சர்வதேச விமான நிலையத்தை அமைத்தால் ஒட்டுமொத்தமாகவே ஓசூர் மட்டுமில்லாமல் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் பலன் தரும்.
ஓசூரை பொறுத்தவரை டிவிஎஸ், டாடா , ஏதர், ஓலா என பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலைகளை கொண்டிருக்கிறது. உற்பத்தி ரீதியாக வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால் சர்வதேச விமான நிலையம் அமைத்து ஏற்றுமதி இறக்குமதியை எளிமையாக்கும் போது இந்த நகரம் மட்டும் இல்லாமல் சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையும் என்கிறது தமிழ்நாடு அரசு.
ஓசூரில் பேரிகை பாகலூர் பகுதியில் விமான நிலையத்தை அமைப்பது என முடிவு செய்தது இதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி இருந்தது. ஆனால் மத்திய அரசு விமான நிலைய திட்டத்தை நிராகரித்துவிட்டது. இது தமிழ்நாடு அரசுக்கும் தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஓசூர் விமான நிலைய திட்டம் நிராகரிக்கப்பட்டது ஏன் என்பதற்கான காரணங்களை தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாடு எம்பிக்கள் கனிமொழி, சோமு, கல்யாண சுந்தரம் ஆகியோர் ஓசூர் விமான நிலைய திட்டம் ஏன் நிராகரிக்கப்பட்டது என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு எழுத்துப்பூர்வமாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பதில் அளித்திருக்கிறார். அதில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமான நிலையத்தால் செயல்படுத்தப்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ்நாடு முன்வைத்த ஓசூர் விமான நிலைய திட்டத்தை மத்திய அரசு ஏற்கவில்லை என கூறி இருக்கிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதமே தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கான சைட் கிளியரன்ஸ் கோரிக்கை அனுப்பி இருந்தது. இந்த திட்ட அறிக்கை இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் விமான போக்குவரத்து இயக்குநரகம், பாதுகாப்பு துறை அமைச்சகம் ஆகியோரின் கருத்துக்களுக்காக பகிர்ந்து இருந்தோம் என குறிப்பிட்டு இருக்கும் ராம் மோகன் நாயுடு அனைவரின் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் திட்டத்தை நிராகரித்ததாக கூறியிருக்கிறார். அதாவது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்தின் விமான நிலையத்தால் மேற்கொள்ளப்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காகவும் பாதுகாப்பு படைகளின் செயல்பாட்டு தயார் நிலையை உறுதிப்படுத்தவும் ஓசூர் விமான நிலைய திட்டத்தை நிராகரித்ததாக எழுத்துப்பூர்வமான பதிலில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதற்கிடையே தமிழ்நாடு அரசின் தொழில் மேம்பாட்டு கழகம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமான நிலையத்தின் செயல்பாடுகளை பாதிக்காத வகையில், ஓசூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த முடியும் என்பதற்கான தொழில் நுட்ப காரணங்கள் அடங்கிய விவரங்களை சேர்த்து புதிய விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறது. கூடிய விரைவில் இதனை மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப் போவதாக தெரிவித்திருக்கிறது.