மத்திய மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக 13-ந்தேதி திருச்சி வருகை

திருச்சி: பிப்ரவரி 11-
தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு
ஆயத்தமாகி வருகின்றன. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.
அந்தவகையில் மத்திய மந்திரி அமித்ஷா கடந்த மாதம் திருச்சி வருகை தந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.
அதேபோல் பிரதமர் மோடி சென்னையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அதேபோல் அடுத்தமாதம் (மார்ச்) 1-ந்தேதி மதுரை வருகை தர உள்ளார். மேலும் பா.ஜ.க. மூத்த தலைவர்களும்
அடிக்கடி தமிழகம் வந்து செல்கின்றனர். மத்திய மந்திரி பியூஸ் கோயல் தமிழகத்தில் முகாமிட்டு தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.இதற்கிடையே மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் மற்றும் காரைக்காலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு
நாள் சுற்றுப் பயணமாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) திருச்சி வருகை தர உள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு
வருகை தரும் அமித்ஷா அன்று இரவு திருச்சியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்கிறார்.மறுநாள் பிப்ரவரி 14-ந்தேதி திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் புறப்பட்டு செல்கிறார்.காரைக்கால் வரிச்சிகுடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் தரையிறங்குகிறார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு காரைக்கால் நகராட்சி திடலுக்கு காலை 11 மணிக்கு சென்றடைகிறார்.
அதன் பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
பொதுக்கூட்டம் முடிவடைந்த பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் வரும் அவர், விமானத்தில் சேலம் புறப்பட்டு செல்கிறார்.
5 அங்கு நடைபெறும் பா.ஜ.க. மத்தியக்குழு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். அமித்ஷா வருகையையொட்டி மத்திய மந்திரிகள் பியூஸ்
கோயல் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் திருச்சியில் முகாமிட உள்ளனர்.அமித்ஷா இரண்டு நாட்கள் திருச்சியில் இருப்பதால் 13-ந்தேதி மாலை அல்லது 14-ந்தேதி தமிழக தேர்தல் நிலவரம் குறித்து பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்க வாய்ப்புள்ளதாகவும் பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.